கூடலுார் : முல்லை பெரியாறு அணையில், தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று ஆய்வு நடந்தது. ''இப்பிரச்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த அ.தி.மு.க.,வினருக்கு தகுதியில்லை,'' என, துரைமுருகன் தெரிவித்தார்.கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட அளவான 142 அடி உயர்வதற்கு முன், அக்., 29-ல் அணையை ஒட்டியுள்ள ஆறு ஷட்டர்கள் வழியாக, கேரள பகுதிக்கு 2,950 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.அப்போது, அணையின் நீர் மட்டம் 138.95 அடியாக இருந்தது. தமிழக அமைச்சர்களோ, தேனி கலெக்டரோ இல்லாமல், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், வருவாய்த் துறை அமைச்சர் ராஜன் முன்னிலையில் திறந்ததை கண்டித்து, தமிழக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அதிகாரிகள் குழு பெரியாறு அணையில் ஆய்வு நடத்தியது. தேக்கடியில் இருந்து பொதுப்பணித் துறை படகு வாயிலாக அணைப் பகுதிக்கு சென்றனர்.மெயின் அணை, பேபி அணை, கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கும் ஷட்டர்களை ஆய்வு செய்தனர். அணையில் நீர் மட்ட அளவுகோல் இருக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர்கள் பெரியசாமி, மூர்த்தி, சக்கரபாணி, அரசு கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், தேனி கலெக்டர் உடன் இருந்தனர்.
பின், தேக்கடியில் துரைமுருகன் அளித்த பேட்டி:மத்திய நீர்வள கமிஷன் ஆலோசனையில், 'ரூல் கர்வ்' எனும் நீர் மட்ட கால அட்டவணை முறைப்படி, அணையில் தற்போது நீர்மட்டம் தேக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தான் கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நவ., 10 வரை 139.50 அடி வரையும், நவ., 30 வரை 142 அடி வரையும் தேக்கலாம். அண்டை மாநில அரசுடன் சுமுக உறவு உள்ளது. கேரள முதல்வராக பினராயி விஜயன் இருக்கும்போதே இப்பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும்.
பேபி அணையை பலப்படுத்த இடைஞ்சலாக உள்ள மூன்று மரங்களை அகற்ற, கேரள வனத்துறை தாமதப்படுத்துகிறது. இவற்றை அகற்றி, விரைவில் பேபி அணையை பலப்படுத்தி அணையில் 152 அடி தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பெரியாறு அணை பல தொழில்நுட்ப ஆய்வுக்கு பின் பலம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் 142 அடி நீர் தேக்க உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதிய அணை
அணை அருகே கேரளா புதிய அணை கட்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.பழனிசாமி, பன்னீர்செல்வத்திற்கு பெரியாறு அணையை பற்றி என்ன தெரியும். 10 ஆண்டு ஆட்சியில் எத்தனை முறை பெரியாறு வந்தனர். அணையை பற்றியே தெரியாதவர்கள் இப்பிரச்னைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த தகுதியற்றவர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE