சென்னை : தி.மு.க., அரசை விமர்சிக்க தயங்கும் அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதற்கு தயாராகும் விதமாக, போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், நாளை முதல் விருப்ப மனுக்களை பெற உள்ளது.
தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இடம் பெற்றிருந்தது. உளவுத்துறை தகவலின் அடிப்படையில், 'அ.ம.மு.க.,வை இணைத்து கொண்டால் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம்' என, சில மேலிட தலைவர்கள், அ.தி.மு.க., தலைவர்களிடம் தெரிவித்தனர்.அவர்கள் அதை ஏற்காமல், 'அ.ம.மு.க., இல்லாமல் ஆட்சியை பிடிப்போம்' என்று மறுத்து விட்டனர்.
பிரசாரம்
பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கினர். அதில், நான்கு, ஐந்து தொகுதிகள் மட்டுமே, பா.ஜ., கேட்டவை. மாநில தலைவராக இருந்த முருகன் போட்டியிட விரும்பிய ராசிபுரம் கூட ஒதுக்கவில்லை. கட்சியினர் போட்டியிட முன்வராத பல தொகுதிகளை, பா.ஜ.,வுக்கு ஒதுக்கினர். வேறு வழியில்லாமல் கூட்டணி தர்மத்துக்காக, அ.தி.மு.க., ஒதுக்கிய தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட்டது. இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள், கூட்டணி வெற்றிக்காக தீவிர பிரசாரம் செய்தனர்.
அதேபோல, பா.ஜ., தொண்டர்களும், நிர்வாகிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.ஆனால், பிரதமர் மோடியின் படத்தை கூட, அ.தி.மு.க.,வினர் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை. ஆட்சியை இழந்ததும், 'தோல்விக்கு பா.ஜ., தான் காரணம்' என, அ.தி.மு.க.,வினர் குறை கூறினர். அதை எல்லாம் பொருட்படுத்தாமல், அக்கட்சியுடன் பா.ஜ., கூட்டணியை தொடர்ந்தது.
ஆனால், சமீபத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., தரப்பில் சரிவர பேச்சு நடத்தவில்லை. குறிப்பாக, கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகள், பா.ஜ., நிர்வாகிகளை சரிவர நடத்தவில்லை. பேச்சு நடத்தும் போதே வேட்பாளர்களை அறிவித்தனர். அப்போதும் கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து, அ.தி.மு.க., ஒதுக்கிய இடங்களில் தான் பா.ஜ., போட்டியிட்டது.
வாக்குறுதி
ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளில் போட்டியிட்ட பா.ஜ.,வினர், 381 பேர் வெற்றி பெற்றனர்.தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், ரவுடியிசம், அராஜகம் தலைதுாக்கியுள்ளது என்றும், பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது. அதை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வினர், 'ரெய்டு'க்கு பயந்து அமைதியாக உள்ளனர்.
அதேசமயம், 'டாஸ்மாக்' கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோவில்களை திறக்க கோரியும், பா.ஜ., சார்பில் பிரமாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.மேலும், வன்முறையில் ஈடுபடும் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கவர்னரை சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டது.
மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்துமாறு தமிழக கட்சியினருக்கு, பா.ஜ., டில்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இப்படி செய்தால் தான், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க முடியும் என்றும் அறிவுரை கூறியுள்ளது.
ஆலோசனை
அதையடுத்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 'அ.தி.மு.க.,வினரை பாதுகாப்பதால் நமக்கு எந்த பயனும் இல்லை' என, உள்ளூர் பா.ஜ., நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இவற்றை எல்லாம் மனதில் வைத்தே, விரைவில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக தான், அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தாமலே, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், 7ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறப் போவதாக அறிவித்துள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE