திருப்பூர்: மழையால், திருப்பூரில் பல்வேறு பகுதிகளில், வீடுகளில் மழைநீர் புகுந்தது. நல்லாற்றில் வெள்ளப்பெருக்கால், லட்சுமி நகர் தரைப் பாலம் மூழ்கியது.
திருப்பூர் மாநகராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட அம்மன் நகர், மகாவிஷ்ணு நகர், ஜெ.எஸ்., கார்டன் பகுதிகளில், சாக்கடை கால்வாய் குறுகலாக இருப்பதால், திறந்தவெளியில் தேங்கும் மழைநீர், விரைவாக வடிந்து செல்வதில்லை.நேற்று முன்தினம், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஊத்துக்குளி - 36 மி.மீ., - காங்கயம், 26.80 மி.மீ., - அவிநாசி, 18 மி.மீ., - திருப்பூர் வடக்கில், 6 மி.மீ., - மூலனுார், 7 மி.மீ., - மடத்துக்குளம் - 6 மி.மீ., உட்பட, மாவட்டத்தில் சராசரியாக, 12.59 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.கடந்த வாரத்தை காட்டிலும், நொய்யல் ஆற்றில், வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. அணைமேடு தடுப்பணையில், மழைநீர் நிரம்பி, ஆர்பரித்தபடி சென்று கொண்டிருக்கிறது.
மக்கள் மறியல்
அங்கேரிபாளையம் மெயின் ரோடு அருகே, திறந்தவெளியில் தண்ணீர் தேங்கி, அருகே உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அங்கேரிபாளையம் ரோட்டில் அமர்ந்து, காலை, 7:00 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மக்களை சமாதானம் செய்தனர். அதற்கு பிறகு, சாக்கடை அடைப்பு சரிசெய்யப்பட்டு, தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது.
மூழ்கிய தரைப்பாலம்
திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் பெய்த கனமழையால், நல்லாற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கால், திடக்கழிவுகள் அடித்துவரப்பட்டு, லட்சுமிநகர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. பிச்சம்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் உள்ள தரைப்பாலம், பெரும்பாலும் சேதமானதால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக, தரைப்பாலத்தை சீரமைத்து கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
வலுவிழந்த குளம்
பட்டம்பாளையம் ஊராட்சியில் உள்ள, கருப்பராயன் கோவில் குளம், மழைநீரால் நிரம்பியது. குளக்கரைகள் வலுவற்ற நிலையில் இருப்பதால், விரைவில் குளத்தை புனரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிராமிய மக்கள் இயக்க நிர்வாகி சந்திரசேகரன் கூறுகையில், ''2017ல் கனமழை பெய்த போது குளக்கரை வலுவிழந்துள்ளது. கரை உடையும் நிலையில் இருப்பதால், பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ., விஜயகுமாரிடம் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை,'' என்றார்.
கனமழைக்கு தாங்குமா?
சிறிய மழைக்கே திருப்பூரின் உள்கட்டமைப்புகள் தாக்குப்பிடிக்காத நிலை உள்ளது. கனமழை பெய்தால், என்னாகுமோ என்று மக்கள் அஞ்ச வேண்டிஇருக்கிறது.