மும்பை: மஹாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் அஹமது நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அங்கு கோவிட் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 10 பேர் தீயில் சிக்கியும், மூச்சுத் திணறியும் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமுற்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மற்ற 5 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தீவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தீவிபத்திற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. இருப்பினும், மின்சார பிரச்னை காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்கு உத்தரவு
தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் இரங்கல்
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி: மஹாராஷ்டிரா மாநிலம் அஹமது நகரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது அறிந்து வருத்தமுற்றேன். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Anguished by the loss of lives due to a fire in a hospital in Ahmednagar, Maharashtra. Condolences to the bereaved families. May the injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) November 6, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE