தெய்வமாக மக்கள் மதித்த ஒரு மாமனிதரின் பிறந்த நாள் விழாவில், பார்ப்பவர் வெறுப்படையக் கூடிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அரசின் அனுமதியுடன் நடக்கும் ஒரு ஊர்வலத்தை முன் நின்று நடத்தும் முக்கிய நபர்கள், அமைதியாக நடத்துவதாக வாக்குறுதி அளித்து விட்டு, வன்முறையை கட்டுப்படுத்தவில்லை என்றால், பலவந்தமாக கலைக்க வேண்டிய கட்டாயத்துக்கு காவல் துறையினர் தள்ளப்படுகின்றனர்.
கண்ணீர் புகை குண்டு, தடியடி போன்றவற்றை பிரயோகிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அப்படி ஏற்பட்டால், காவல் துறையின் நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் துவங்கி, வாகன பராமரிப்பு, நிலம் சம்பந்தமான பரிமாற்றங்கள், கட்டடங்கள் கட்ட பெறும் அனுமதி, மின் இணைப்பு பெறுவது என்று அனைத்துக்கும் அரசு விதித்துள்ள வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன.தவறுகள் நடந்து விடக் கூடாது; அப்பாவிகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது; செல்வாக்கு மிக்கவர்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி, அதிகப்படியான சலுகைகள் பெற்று ஆதாயம் அடைந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அந்த சட்ட திட்டங்கள் உள்ளன.
நீதிமன்றத்தின் கதவுகள்
ஆனால், சாதாரண செயல்களை நிறைவேற்றக் கூட, எந்த அரசு அதிகாரியை சந்திக்க வேண்டியிருந்தாலும், அவருக்கு வேண்டியவர் யார் இருக்கின்றனர்; உறவினர் யார்? எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் விசாரிக்க துவங்கி விடுகின்றனர்.இறுதியாக, ஒரு அரசியல் தலைவரையோ அல்லது வக்கீலையோ அழைத்துக் கொண்டு தான் போகின்றனர். அதற்காக அவர்கள் எவ்வளவு செலவழிக்க வேண்டியிருக்கும் என்பது நாம் அறிந்ததே.எனக்கு தெரிந்து, கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், தவறான முறை பின்பற்றப்படுவதால், அங்கு அதிக அளவில் போலி நகைகள் அடகு வைக்கப்படுகின்றன.
அப்பாவி வங்கி கிளை மேலாளர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டி, முந்தைய ஆட்சிக் காலத்தில், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும், துணை முதல்வருக்கும், பாதிக்கப்பட்ட பெண் வங்கி கிளை மேலாளரால் மனு கொடுக்கப்பட்டது; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பல அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும், யாருக்கும் அதிலுள்ள உண்மையை கண்டறியும் ஆர்வமில்லை.
'நமக்கேன் வம்பு' என்று இருந்ததன் விளைவு, அந்த பெண் அதிகாரி நீதிமன்றந்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறார்.நான் உதவி ஆய்வாளராக பணியாற்றிய போது, உதவி ஆய்வாளர் தான் நிலைய பொறுப்பு அதிகாரி. பொதுமக்கள் கூடும் கடைத்தெருவில் தவறான நோக்கத்தோடு, தேவையின்றி கூடியிருக்கும் இளைஞர்கள் கூட்டத்தை, ஒரு உதவி ஆய்வாளர் தனியே நின்று விரட்டி விடுவார்.
'இது போல தினமும் வாங்க சார்... நீங்க வந்த பிறகு தான் கடைத்தெரு அமைதியாக இருக்கிறது; பெண்கள் பயமின்றி வர முடிகிறது' என்று உற்சாகப்படுத்தும் பொதுமக்களையும் பார்த்து உற்சாகத்தோடு பணியாற்றிய என் போன்ற காவல் துறை அதிகாரிகளுக்கு, முன் பணியாற்றி பிரபலமடைந்த அதிகாரிகள் தான் வழிகாட்டிகள்.
எங்களை பார்த்து எங்களுக்கு பிறகு வந்தவர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றி பிரபலமடைந்தனர். ஆனால், நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகம் மறைந்து, இப்பொழுதெல்லாம் அதிகாரிகள் பிரபலமடைவது அரிதாகி, ரவுடிகள் பிரபலமடைந்து வருகின்றனர்.காவல் துறையினர் முன்பாகவே, காவல் துறை மற்றும் அரசு வாகனங்களில் ஏறி ஆட்டம் போடும் இளைஞர்களையும், அதை அப்படியே பார்த்து நிற்கும் காவல் துறையினரையும், இன்னும் சில இடங்களில் காவல் துறையினர் தாக்கப்படும் அவலத்தையும் பார்க்கும்போது, என் போன்று ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளின் மனம் மிகவும் வேதனை அடைகிறது.
கசப்பான உண்மை
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கிறது. அரசு அதிகாரிகள் எல்லாரும் ஊழல் பேர்வழிகள் இல்லை; திறமையற்றவர்கள் இல்லை. மக்கள் எல்லாரும் அராஜகத்தை ஆதரிக்கும் கும்பல் இல்லை. இருபுறமும் இருக்கும் நல்லவர்கள் ஒன்றிணைந்து, சமூக அக்கறையோடு செயல்படவில்லை என்பது தான் கசப்பான உண்மை.ஊழல் அதிகாரிகளை தட்டிக்கேட்க உயர் அதிகாரிகள் தயங்குவது போல, அராஜகக் கும்பலை தட்டிக்கேட்க நல்ல மனிதர்கள் தயங்குகின்றனர். இவர்கள் இருவருக்கும், அவர்களின் பொறுப்பை உணர்த்துவது யார்?
அது தான் ஆட்சியில் இருப்போரின் கடமை. அது, அவர்களின் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.
இன்று, கூலிப்படைகள் நடத்தும் கொலைகள், ஆள் கடத்தல் ஆகியவை, நிலம், பணம் மற்றும் பாலியல் தொடர்புகள் சம்பந்தப்பட்டவை தான். இவை அனைத்தையும் துவக்கக் கட்டத்தில், சிறிய அளவில் எழும் புகார்களை, சம்பந்தப்பட்டவர்கள் வருவாய் துறை அதிகாரிகளையோ, காவல் துறையையோ அணுகும்போது, இரு துறையினரும் இணைந்து செயல்பட்டு, பதிவேடுகள் மற்றும் ஆவணங்களின் உதவியோடு தீர்த்து வைத்து விட முடியும்.
தீர்க்க முடியாத, ஒரு சில வழக்குகளில் மட்டும் நீதிமன்றத்தை நாடும்படி அறிவுறுத்தி அனுப்பலாம்.பிரச்னையின் தன்மை என்ன என்றே அறிந்து கொள்ளாமல், கவனம் செலுத்தாமல், 'சிவில்' பிரச்னை என்று கூறி புறக்கணிப்பது, 'நீதிமன்றத்துக்கு போ' என்று விரட்டுவது, அவர்கள் ஏற்றிருக்கும் பதவிக்கு இழைக்கப்படும் அநீதி.
தன் அவசரத்துக்கு நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்காது என்று முடிவெடுக்கும் பாதிக்கப்பட்ட நபர், அந்தப் பகுதியில் தன்னை பலம் படைத்தவனாக காட்டி, வலம் வரும் தனிநபரை அணுக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்.அதில் ஒரு கணிசமான லாபத்தை கண்ட அந்த நபர், ஒரு கும்பலை சேர்த்து தாதாவாக உருவாகி, துணைக்கு ஒரு கூலிப்படையையும் வைத்துக் கொள்கிறான்.இது தான், காவல் துறை அதிகாரிகள் பிரபலமடைந்த காலம் போய், ரவுடிகள் பிரபலமாகி, அரிவாளால் 'கேக்' வெட்டத் துவங்கிய கதை.
பத்திரிகைகள் போல
இதையெல்லாம் கண்காணித்து, அறிக்கையாக உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும் இடத்தில் இருக்கும் உளவு மற்றும் நுண்ணறிவு பிரிவு, பல சமயங்களில் சம்பவம் நடந்த பிறகு செய்தி வெளியிடும் பத்திரிகைகள் போல செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சில திறமை மிக்க அதிகாரிகள் நுண்ணறிவு பிரிவை முறையாகப் பயன்படுத்தி, உரிய முன் நடவடிக்கை எடுப்பதால் பல குற்றங்களும், அசம்பாவிதங்களும் தடுக்கப்படுகின்றன.
ஓர் உயிர் பலி
தாதாக்கள் பலர் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். தாதாக்கள் உருவானதை தடுத்திருக்க முடியும். இந்த நுண்ணறிவு பிரிவினரின் திறமையான செயல்பாட்டால், அது சாத்தியம்.தற்போது பதவியில் இருக்கும் காவல் துறை தலைமை இயக்குனர் மற்றும் தலைமை செயலரால், ஒட்டுமொத்த தமிழக மக்களின் நன்மதிப்பையும் பெறுவது சாத்தியமாக இருக்கிறது. அதுபோல, அவர்களின் தலைமையின் கீழ் பணியாற்றும் ஒவ்வோர் அதிகாரியும், அவர்கள் பகுதியில், மக்களிடம் நன்மதிப்பை பெறுவது என்பது ஒன்றும் பெரிய காரியமல்ல.அதற்கு தேவையானது எல்லாம் நேர்மை, திறமை மற்றும் உற்சாகமான உழைப்பு ஆகிய மூன்றும் தான். அவர்களின் நேரத்தில் பெரும் பகுதியை, அவர்களின் பொறுப்பில் உள்ள பகுதி மக்களிடம் செலவிட வேண்டும்.ஒரு அரசு அதிகாரியால், தன் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற இயலவில்லை என்றால், அவருக்கு மேற்குறிப்பிட்ட மூன்றில் ஒன்றாவது இல்லாதிருக்க வேண்டும்.
நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டமைப்பாக இருந்தாலும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய நிலையில் இருக்கும் கட்டடம் மரம் போன்றவற்றை அகற்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது.
அப்படி ஒரு ஆபத்தான நிலையில் மரம் ஒன்று தலைமைச் செயலகத்திலேயே இருந்திருக்கிறது என்றால், நிச்சயமாக பலரின் கவனத்தை அது ஈர்த்திருக்கும். பார்த்தவர்களில் பலர் அது ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதை நிச்சயமாகக் கணித்திருப்பர்.ஆனால், அதை நாம் யாரிடம் சொல்வது, சொன்னாலும் நம் சொல்லுக்கு மதிப்பிருக்குமா என்ற தயக்கத்தில் விட்டிருப்பர்.இதற்கென்று நியமிக்கப்பட்டுள்ள, தலைமைச் செயலகத்தின் பராமரிப்பு பொறுப்பில் உள்ள அதிகாரிகள், கட்டமைப்புகளின் ஸ்திரத்தன்மையை கணித்தறியும் பயிற்சி
பெற்றவர்கள். அவர்கள் இதை கணித்திருக்க முடியும். ஆனால், துணிந்து முடிவெடுப்பதில் தயக்கம் காட்டியதன் விளைவு தான், ஓர் அப்பாவி பெண் காவலரின் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது.இந்த நிகழ்வுக்கு பிறகு எல்லா அதிகாரிகளையும் முடுக்கி விட்டிருப்பர். எல்லாரும் மரங்களை ஆய்வு செய்து, இந்நேரம் பல மரங்களின், கட்டடங்களின் பட்டியல் தயாராகி கொண்டிருக்கும்.
இப்படி ஒவ்வொரு முறையும், நம் அதிகாரிகளை விழிப்படையச் செய்ய, குறைந்தபட்சம் ஓர் உயிர் பலி தேவைப்படுகிறது.
பசியறிந்து பால்
ஒரு கட்சியை வெளியேற்றி விட்டு, அடுத்த கட்சியை ஆட்சியில் மக்கள் அமர்த்துவதற்கு காரணம், முந்தைய ஆட்சியில் அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமும், அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே என்ற பெருந்தன்மையுடன் கூடிய எதிர்பார்ப்பும் தான்.தற்போதைய முதல்வரின் செயல்பாடுகள், அவர் இதை நன்கு உணர்ந்திருப்பதை வெளிப்படுத்து கிறது.'குழந்தை அழுவதற்கு முன்பே பசியறிந்து பால் கொடுப்போம்' என்ற அவரது வாக்குறுதிக்கு, அவரின் கீழ் செயல்படும் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒத்துழைத்தால், மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
தற்போதைய ஆட்சி, அடுத்த தேர்தலிலும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள அது உதவும். ஊழல் தடுப்பு போலீசும், வருமான வரி அதிகாரிகளும், ஒரே நேரத்தில், 40 - 50 வீடுகளில் 'ரெய்டு' என முற்றுகையிட்டு, அவமானத்தை பரிசாகத் தரும் அவசியம் இருக்காது.தங்களுக்கு பதவியளித்த அரசின் தவறுகளுக்கு துணைபோகும் அதிகாரி கள், ஆபத்தானவர்கள் என்பதை அரசு பொறுப்பில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
தேவைக்கு அதிகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, போக்குவரத்தை நிறுத்தி, முதல்வரை மகிழ்விக்க, சில அதிகாரிகள் செய்த முயற்சி தவிர்க்கப்பட்டிருப்பது, மக்களால் வெகுவாக பாராட்டிப் பேசப்படுகிறது.இன்னும் அரசியல்வாதிகளையும், அமைச்சர்களையும், சுயநலத்துக்காக சுற்றி வரும் அதிகாரிகளை, மக்கள் பக்கம் திருப்பி விடும் செயலை இந்த அரசு செய்ய வேண்டும். அப்போது தான், மக்களின் ஒத்துழைப்பு முழுவதுமாக கிடைக்கும்.மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக ஆளுங்கட்சி அரசியல்வாதிகளை அழைத்தபடி தலைமைச் செயலகத்துக்குப் படையெடுப்பதை நிறுத்தி, தங்களை தேர்ந்தெடுத்த மக்களின் குறைகளை கேட்க, அவர்களின் இடம் தேடி சென்று, ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் சந்திக்க வேண்டும்.
மக்களுக்காக தான்
அராஜக செயல்களில் ஈடுபட்டு, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும், 20 சதவீத கும்பலை பற்றி கவலைப்படாமல், மவுனமாக பார்த்து கொண்டிருக்கும் 80 சதவீத நல்லவர்களுக்கு துணிவையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது தான், ஆட்சியை அமைதியாக நடத்தவும், மக்களின் நன்மதிப்பை பெறுவதற்குமான வழி.
நல்லவர்கள் அரசை மதிக்க, அதிகாரிகள் மக்களை மதித்து, நேர்மையாக செயல்பட வேண்டும். அவர்களின் குறைகளைக் கண்ணெடுத்து பார்க்க வேண்டும்; காது கொடுத்து கேட்க வேண்டும்.
அவர்களுக்கு புரியாது என்ற ஒரே காரணத்தால், அரசு ஆணை, சட்டம் என்று எதையாவது சொல்லி அவர்களை அலைக்கழித்தால், அவர்களுக்கு ஏற்படும் ஏமாற்றமும், வெறுப்பும், அரசின் மீது தான் திரும்பும்.
ஆங்காங்கே நிகழும் தீக்குளிப்பு சம்பவங்கள் இதற்கு சான்று. மக்களுக்காக தான் சட்டம். சட்டத்துக்காக மக்கள் இல்லை என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.இது என் சொந்தக்கருத்து மட்டுமல்ல, நான் எழுதுகிறேன் என்பதற்காக என்னிடம் வந்து குவிந்த கோரிக்கைகள்!
தொடர்புக்கு: மா.கருணாநிதி
காவல் துறை
கண்காணிப்பாளர் (ஓய்வு)
மொபைல்: 98404 88111
இ - மெயில்: spkaruna@gmail.com