'பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த நாடும் விதி விலக்கல்ல. அதனால், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
உலகளவில் பல ஆண்டு களாக காணப்படும் சராசரி வெப்ப நிலவரத்தை பருவநிலை என்கிறோம். ஆனால், 19ம் நுாற்றாண்டில் இருந்த, 1.2 செல்ஷியஸ் வெப்பநிலையை விட, தற்போது அதிக வெப்பம் நிலவுகிறது.கரியமில வாயு வெளியேற்றம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. 'இதற்கு உடனடியாக தீர்வு காணத் தவறினால், உலகின் வெப்பம் 4 செல்ஷியசை தாண்டும்' என, விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.உலக வெப்பமயமாதலை தடுக்க, 1992ல் பிரேசிலில் ஐ.நா., சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு நடந்தது.
முக்கியத்துவம் என்ன?
இம்மாநாட்டில் 179 நாடுகள் கலந்து கொண்டன. அடுத்து, 1995ல் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடந்தது. அதன்பின் ஆண்டுதோறும் இம்மாநாடு நடந்து வருகிறது. 2020ல் கொரோனா காரணமாக மாநாடு நடக்கவில்லை. இந்தாண்டு பருவ நிலை மாற்ற மாநாடு, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. உலகம் வெப்பமயமாவதை தடுப்பதற்கான விதிமுறைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, 2015ல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பருவநிலை மாநாட்டில் முடிவானது.இது தொடர்பான ஒப்பந்தத்தின்படி, 2018க்குள் குறிப்பிட்ட சதவீத வெப்ப உயர்வை உலக நாடுகள் குறைக்க வேண்டும்; அதற்கு மாறாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, உலகின் வெப்பநிலை உயர்ந்து வருவதை காண்கிறோம்.
இது, துரதிருஷ்டவசமாக இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட வளரும் நாடுகளில் அதிகமாக உள்ளது. ஆனால், பிற நாடுகள் போலன்றி இந்தியா, பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தப்படி, வெப்பநிலை உயர்வைக் குறைக்க உண்மையான அக்கறையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, ஐந்து முக்கிய திட்டங்களின் கீழ் வெப்பநிலையை குறைப்பதற்கு இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு குறித்து தெரிவித்தார்.இதற்கு உலகத் தலைவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர். உலகின் வெப்ப உயர்வை, 1.5 சதவீதமாக நிலை நிறுத்த வேண்டுமெனில், 2050ல் கரியமில வாயுவின் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க வேண்டும்.
இது குறித்து எரிசக்தி, சுற்றுச்சூழல், குடிநீர் கவுன்சில் நிறுவனர் நரேன் கூறும்போது, ''குறைந்த கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பாக, கிளாஸ்கோ மாநாட்டில் துணிச்சலாக பேசிய பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்,'' என்றார். இம்மாநாட்டில், 'பருவ நிலை மாற்ற பாதிப்பை குறைக்க வளர்ந்த நாடுகள் ஏற்கனவே உறுதி அளித்தபடி, அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 1 சதவீத நிதியை வளரும் நாடுகளுக்கு தர வேண்டும்' என, மோடி வலியுறுத்தினார்.
நிதியுதவி அவசியம்
கடந்த 2009ல் வளர்ந்த நாடுகள், 2020 வரை ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவியை வளரும் நாடுகளுக்கு வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதில், 2013 - 2019 வரை 65 சதவீதம் தான் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தான் பிரதமர் மோடி, கிளாஸ்கோ மாநாட்டில் வளர்ந்த நாடுகளுக்கு நினைவூட்டினார். 'வளரும் நாடுகள் வெப்பமய இலக்கை ஓரளவாவது எட்ட, வளர்ந்த நாடுகள் 2023ல் குறைந்தபட்சம் 10 ஆயிரம் கோடி டாலர் தர வேண்டும்' என, பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு, 'அம்பான்' புயல் காரணமாக இந்தியாவிற்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இது போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்பை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், வளரும் நாடுகளுக்கு பல லட்சங்கள் அல்ல; பல லட்சம் கோடிகள் தேவைப்படும். அப்போது தான், 2050ல் கரியமில வாயு வெளியேற்றத்தை சமநிலைப்படுத்தி மக்களை காக்க முடியும். அதனால், கிளாஸ்கோ மாநாட்டில் பிரேசில், தென் ஆப்ரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள், நீண்ட கால அடிப்படையில் புதிதாக பருவநிலை மாற்றத்திற்கான நிதியுதவி இலக்கை நிர்ணயிக்க வலியுறுத்தியுள்ளன. எனவே, வளர்ந்த நாடுகள் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருதி, வளரும் நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி வழங்க வேண்டும்.
உலகத் தலைவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர். உலகின் வெப்ப உயர்வை, 1.5 சதவீதமாக நிலை நிறுத்த வேண்டுமெனில், 2050ல் கரியமில வாயுவின் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க வேண்டும் - நமது சிறப்பு நிருபர் -