புதுடில்லி :கட்டுப்பாடுகளை மீறி தீபாவளி பண்டிகையின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதால், வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த, டில்லி முழுதும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகளில் 114 டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு மோசமடைந்துள்ளது.
தர குறியீடு
தீபாவளிக்கு மறுநாளான நேற்று முன்தினம் டில்லியில் காற்று தர குறியீடு, 462 ஆக உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.ஹரியானாவின் குருகிராமில் 478; பரிதாபாதில் 460 ஆக காற்றின் தர குறியீடு உயர்ந்துள்ளது.
நடவடிக்கை
இதேபோல் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 466; காஸியாபாதில் 450 ஆகவும் உயர்ந்து உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை டில்லி அரசு எடுக்கத் துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக டில்லி முழுதும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகளுக்காக, 114 டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி புகார்
டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:டில்லியில் பயிர்களை, கழிவுகளை தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. காற்று மாசு ஏற்பட்டுள்ளதற்கு இது ஒரு காரணம். மற்றொரு முக்கிய காரணம், தீபாவளியன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகள். அன்று பெரும்பாலான மக்கள், அதிக பட்டாசுகளை வெடிக்கவில்லை; எனினும், டில்லி அரசுக்கு சவால்களை ஏற்படுத்த, பா.ஜ.,வினர் வேண்டுமென்றே பட்டாசுகளை வெடித்துள்ளனர். அவர்களால் தான் காற்று மாசு மோசமடைந்துள்ளது.காற்று மாசை கட்டுப்படுத்த, அவசரகால நடவடிக்கையாக லாரிகள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.