சென்னை :முல்லைப் பெரியாறு அணை அருகே, பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட, கேரள வனத்துறை அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள, பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட, கேரள வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் வழியே இந்த தகவல் கிடைத்தது.
பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த, மரங்களை வெட்டி அனுமதிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. இது மிகவும் முக்கியமானது. அணை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துவங்க இந்த அனுமதி உதவும்.
அனுமதி வழங்கியதற்காக, கேரள அரசுக்கும், கேரள முதல்வருக்கும், தமிழக அரசு சார்பிலும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் சார்பிலும் நன்றி.
இது, இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்திற்கு பயனளிக்கும் வகையில் அமையும். இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நல்லுறவு, மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.
முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்தவும், அணையின் கீழ் பகுதியில் கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க, தமிழக அரசு உறுதியாக உள்ளது.
வண்டிப் பெரியாறு மற்றும் பெரியாறு அணைப் பகுதிக்கு இடையே உள்ள சாலையை சீரமைக்கவும், பொருட்களை எடுத்து செல்லவும் அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தின் சார்பில் வந்துள்ள முக்கியமான கோரிக்கைகளையும் விரைவுபடுத்த வேண்டும்.
பழுதுபார்ப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை செய்ய, தேவையான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை எடுத்து செல்ல, இந்த சாலைப்பணிகள் அவசியம். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மரங்களை வெட்ட அனுமதி வழங்கிய கேரள முதல்வருக்கும், கேரள அரசுக்கும் நன்றி.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE