தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டில் முடிவடைகிறது. ஆளுங்கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.உ.பி., முன்னாள் முதல்வர் மற்றும் பா.ஜ., முன்னாள் தேசிய தலைவர் என முக்கிய பொறுப்புகளை வகித்த, தற்போதைய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தான் அந்த வேட்பாளர் என பேச்சு அடிபடுகிறது.
விரைவில் அதிரடி
ஒரு பக்கம் போதை பொருள் தடுப்பு அமைப்பு, இன்னொரு பக்கம் அமலாக்கத் துறை என, மஹாராஷ்டிரா அரசியலில் புயல் வீசுகிறது. அம்மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரே கைதாகி சிறையில் உள்ளார். இந்த புயல் விரைவில் திசை மாறி தமிழகம் பக்கம் வீசும் என்கிறது டில்லி அரசியல் வட்டாரம்.
இந்த புயலில் சிக்கப் போவது, அரசியலில் செல்வாக்காக உள்ள அந்த குடும்ப பிரமுகர் என்கின்றனர். அவரது வர்த்தக தொடர்புகளை முழுக்க அலசி ஆராய்ந்து வருகிறது ஒரு குழு. அந்த பிரமுகர் யாருடன் பேசுகிறார், என்ன பேசுகிறார், எங்கு தகவல் அனுப்புகிறார் என்கிற அனைத்து விபரங்களும் டில்லியில் கண்காணிக்கப்படுகின்றன. அந்த பிரமுகரின் வக்கீல் மற்றும் ஆடிட்டர் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
அந்த அரசியல் பிரமுகரைப் பாதுகாக்க, கட்சியின் இரண்டு மூத்த அரசியல்வாதிகள் டில்லி வந்து ஒரு சீனியர் அமைச்சரை சந்தித்தனர். 'இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவி தேவை என்றால், 'சிங்கப் பெருமாளை' போய் பாருங்கள்' என கைவிரித்துவிட்டார் அந்த அமைச்சர்.'சிங்கப் பெருமாளுக்கு' எதிராக அரசியல் செய்து அவரிடமே எப்படி உதவி கேட்பது என சங்கடத்தில் உள்ளனர் அந்த கட்சி தலைவர்கள். எப்படியாவது அந்த 'ஈசன்' தான் காப்பாற்ற வேண்டும் என இப்போது கடவுளை நம்பி உள்ளது, அந்த அரசியல் குடும்பம்.
தொழில் அதிபர்களின் ரகசிய சந்திப்பு
தமிழகத்தில் ஆட்சி மாறிய பின் நல்லது நடக்கும் என எதிர்பார்த்த தொழிலதிபர்களுக்கு அதிர்ச்சி. கட்சி வாயிலாக இவர்களுக்கு பல பிரச்னைகளாம். தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வர்த்தகம் செய்யும் மூன்று பெரிய தொழிலதிபர்கள் இந்த விவகாரத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் தமிழர்கள்.
இவர்களுக்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், வட மாநிலங்களிலும் தொழிற்சாலைகள் உள்ளன. சமீபத்தில் இந்த மூன்று பேரும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை ரகசியமாக பெங்களூரில் சந்தித்துள்ளனர். தமிழகத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை அண்ணாமலையிடம் சொல்லியுள்ளனர். 'ஆளுங்கட்சி எங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறது. எங்களால் தமிழகத்தில் தொழில் செய்வது கடினமாக உள்ளது' என கூறியதுடன், தங்களுக்கு மத்திய அரசு வாயிலாக உதவி கிடைக்குமா என்றும் கேட்டுள்ளனர். 'நிச்சயம் உதவி செய்கிறேன்' என உறுதி அளித்துள்ளார் அண்ணாமலை.
அடுத்த பா.ஜ., தலைவர் யார்?
பா.ஜ., தேசிய தலைவராக இருப்பவர் ஜெகத் பிரகாஷ் நட்டா. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. இவருக்கு அடுத்தபடியாக யார் இந்த பதவிக்கு வருவர் என கட்சியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள பூபேந்திர யாதவ், 52, தான் அடுத்த தலைவர் என கட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இவர் ராஜஸ்தானைச் சார்ந்தவர். உச்ச நீதிமன்ற வக்கீல்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு படு நெருக்கம். அயோத்தி ராமர் கோவில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகி விடுவார். 'யார் என்ன வாதிடுகின்றனர்; நீதிபதிகள் என்ன சொல்கின்றனர்' என, அனைத்தையும் குறிப்பெடுத்து அமித் ஷாவிடம் கூறி விடுவார்.
குஷியில் தி.மு.க., - எம்.பி.,க்கள்
எம்.பி.,க்கள் குழுக்கள் வழக்கமாக வெளிநாடு சுற்றுப் பயணம் போவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக இது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், மீண்டும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. லோக்சபா தி.மு.க., - எம்.பி.,க்கள் எட்டு பேர், விரைவில் வெளிநாடு செல்லும் பார்லி., குழுக்களில் இடம் பெற்றுள்ளனர்.
இப்படி வெளிநாடு செல்லும் குழுக்களில் அதிகமாக தி.மு.க., - எம்.பி.,க்களை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிபாரிசு செய்ய, உடனே 'ஓகே' சொல்லி விட்டாராம் சபாநாயகர் ஓம் பிர்லா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE