சென்னை-'வங்கக் கடலில் நாளை மறுதினம் உருவாக உள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வங்கக்கடலில் 9ம் தேதி உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தை எதிர் கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து, நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.அப்போது, முதல்வர் பேசியதாவது:வங்கக்கடலில், நாளை மறுதினம் உருவாக உள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
எனவே, மாவட்ட கலெக்டர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். l தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். பொது மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு துறைகள் செயல்பட வேண்டும் l மாவட்ட கலெக்டர்கள், ஆயத்த பணிகள், மீட்பு, நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுவோருக்கு, தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்l குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவைப்படும், பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்l தொற்று வியாதிகள், டெங்கு பரவாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்l
அரசு அலுவலக வளாகங்களிலும், சாலை ஓரத்திலும் உள்ள பலவீனமான மரங்களை கண்டறிந்து, அப்புறப்படுத்த வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்l நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க, அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். ஆறுகள், பாலங்கள் மற்றும் சிறு பாலங்களை கண்காணிக்க வேண்டும்l நீர் நிலைகளின் கரைகள் சேதமடையாமல் இருப்பதை, பொதுப்பணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்l

விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி, பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வேண்டும்l வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்கும் வகையில், சாலைகளில் உள்ள சேதங்கள் மற்றும் பள்ளங்கள் குறித்துஎச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். பொது மக்கள் ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்l
மழை நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்கக் கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன், கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார். கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, தலைமைச் செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி பங்கேற்றனர்.