சென்னை: வங்கக் கடலில் தமிழக கடற்கரை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று (நவ.,06) இரவு முழுவதும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளி்ல் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நகரின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. சென்னையில் மிக கனமழை நீடீக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது,
அதிகபட்சமாக இதுவரை வில்லிவாக்கத்தி்ல் 16 செ.மீ மற்றும் நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடபழனி, அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் தமிழகத்தில் மதுரை, தஞ்சை, விழுப்புரம் , சேலம், திண்டுக்கல், கரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்தன.
விழுப்புரத்தில் வீடுகளுக்குள் வெள்ள நீர் பகுந்தது. சேலம் அருகே தரைப்பாலம் மூழ்கியதால் 3 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.