முட்டல் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மனம் குளிர்ந்தது| Dinamalar

முட்டல் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மனம் குளிர்ந்தது

Added : நவ 07, 2021
சேலம்: தொடர் மழையால் முட்டல் ஏரி நிரம்பியதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை அடிவாரத்தில், முட்டல் ஏரி உள்ளது. கல்வராயன் மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், முட்டல் ஏரி முழுமையாக நிரம்பி, அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால், பாசன விவசாயிகள்

சேலம்: தொடர் மழையால் முட்டல் ஏரி நிரம்பியதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை அடிவாரத்தில், முட்டல் ஏரி உள்ளது. கல்வராயன் மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், முட்டல் ஏரி முழுமையாக நிரம்பி, அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், கடம்பூர் கழுங்குமலை நீர் வீழ்ச்சியில், அதிகளவில் தண்ணீர் கொட்டுவதால், பலர் குளித்து மகிழ்ந்தனர்.

தம்மம்பட்டியில் 'சதம்': நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, தம்மம்பட்டியில் அதிகபட்சம், 100 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு, 41, கெங்கவல்லி, ஆத்தூர் தலா, 32, ஆணைமடுவு, 12, பெத்தநாயக்கன்பாளையம், 5, வீரகனூர், 3, மேட்டூர், 1.2 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த அக்., 1 முதல், நவ., 6 வரை, சேலத்தில், 249.4 மி.மீ., மழை பெய்துள்ளது. இயல்பான அளவு, 213.6 மி.மீ., வரும், 12 வரை மழை நீடிக்கும் என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு: தேவூர், கல்வடங்கம், தண்ணீர்தாசனூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், கடந்த, 4ல் பெய்த மழையால், காவேரிப்பட்டி, தண்ணீர்தாசனூர் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், தண்ணீர்தாசனூர், நால்ரோடு பகுதிகளில், தாழ்வான பகுதியிலுள்ள கடைகள், 20க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மழைநீரை வெளியேற்ற, நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்ககிரி தாசில்தார் பானுமதி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மழைநீர் சூழ்ந்த பகுதிகளை, நேற்று ஆய்வு செய்தனர். பின், வடிகால் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

தரைப்பாலத்தால் ஆபத்து: வீரபாண்டி அருகே, இனாம் பைரோஜி, புதுப்பாளையத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம், மின்னக்கல் வழியாக, வெண்ணந்தூர் செல்லும் வழியில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. சாய, ரசாயன கழிவால், 10 ஆண்டுக்கு முன், பாலத்தின் தடுப்புகள் அடித்து செல்லப்பட்டன. ஒரு மாதமாக தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடிக்கடி தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாவட்ட எல்லை, பாலத்தின் இணைப்பு பகுதியில் அரிப்பால் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுக்கு முன், அதே இடத்தில் அரிக்கப்பட்ட பள்ளத்தை, மணல் மூட்டைகளால் அடைத்திருந்த நிலையில், அந்த மூட்டைகள் அடித்து செல்லப்பட்டு பள்ளமும் பாதி சாலை வரை விரிவடைந்துள்ளது. ஆபத்தை உணராமல் கடக்க முயலும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றில் அடித்துச்செல்லப்படும் அபாயம் உள்ளதால், மழைக்காலம் முடியும் வரை, பாலத்தை கடக்க முடியாதபடி தடுப்பு அமைக்க வேண்டும். அத்துடன், பழைய தரைப்பாலத்துக்கு பதில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்ட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை சீரமைப்பு பணி: போக்குவரத்துக்கு தடை: ஏற்காடு அடிவாரம், குப்பனூரில், கடந்த, 4 இரவு கனமழை பெய்தது. இதனால், மண், பாறைகள் ஆங்காங்கே சரிந்து, 7 இடங்களில் சாலை சீரழிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல், நேற்று வரை சீரமைப்பு பணி நடந்தது. பாறைகள், மரங்கள் அகற்றப்பட்டன. ஆனால், மலையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டே இருப்பதால் ஒரு இடத்தில் மட்டும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, இரு நாளாக வாகன ஓட்டிகள், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X