
பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சென்னை மழை நீரில் மிதப்பதை அதிகாரிகளால் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை என்பதுதான் நிஜம்.

கடந்த ஒரு மாதமாகவே அமைச்சர்களும், அதிகாரிகளும் நவம்பர் மாத மழையை சமாளிக்க தயராக இருக்கிறோம், நதிகளை துார் வாரிவிட்டோம்,முகத்துவார அடைப்புகளை நீக்கிவிட்டோம், போக்கிடங்களை சுத்தம் செய்துவிட்டோம் என்றெல்லாம் அறிவித்தனர்,அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு மழை சென்னை மக்களை தவிக்கவிட்டுள்ளது.

முதல்வர் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து மக்களிடம் குறைகளை கேட்கிறார் அவர் மட்டுமே ‛மாஸ்க்' அணிந்திருக்கிறார் கூடவரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டனர் போலும்.

‛அண்ணாத்தே' பட விளம்பரங்களுக்கு நடுவே காட்டப்பட்ட செய்திகளில் அணைகள் மதகுகள் எல்லாம் நிரம்பிவிட்டது செம்பரம்பாக்கம்,புழல் ஏரிகள் படிப்படியாக திறந்துவிடப்படுகிறது கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கடந்த 2015 சம்பவத்தை சொல்லி கூடுமானவரை தொலைக்காட்சிகள் பயமுறுத்துகிறது.

ஜெ.,முதல்வராக இருந்த போது அவரைக் கேட்காமல் எந்த அணை நீரையும் திறந்துவிட முடியாது ஆனால் எங்கள் ஆட்சியில் அதிகாரிகள் யாரையும் கேட்க வேண்டியது இல்லை அவர்களே அணையின் இருப்பை பொறுத்து முடிவு செய்யலாம் என்று தகவலுடன் அரசியலும் பேசுகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியம்.

இரண்டு வருஷம் காத்திருந்தோம் இன்னும் இரண்டு நாள் பொறுத்திருக்கமாட்டோமோ? தீபாவளி கொண்டாடிவிட்டு சாவகசமாக எட்டாம் தேதி பள்ளிகளுக்கு பிள்ளைகளை கூட்டிவருகிறோம் என இப்போதுதான் பெற்றோர்கள் முடிவு எடுத்தனர் ஆனால் மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பெற்றோர்கள் மேலும் சில நாள் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
ஆன் லைனும் இல்லாமல் ஆப் லைனும் இல்லாமல் பிள்ளைகள் என்ன படிப்பது என்பது தெரியாமல் தவிக்கின்றனர்,.ஞாயிறோடு எல்லாம் முடியும் திங்கள் நன்றாக விடியும் என்று பார்த்தால் மழை தொடரும் என்று சொல்லி ‛வெதர்மென்'கிலியை ஏற்படுத்துகிறார்.
ஒரே ஆறுதல் மின்சாரம் பெரும்பாலும் தடையின்றி கிடைக்கிறது,நெட் வொர்க் வேலை செய்கிறது,வாட்ஸ் அப்பில் ‛பல் விலக்கிவிட்டேன்'என்பது போன்ற பயனுள்ள தகவல்கள் அம்பாரமாக பரிமாறப்படுகிறது, போய்ச் சேருமிடம் நிச்சயமில்லை என்ற எச்சரிக்கையுடன் பொது போக்குவரத்து தொடர்கிறது,வீட்டிற்கு பேப்பர் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது,சேலை முந்தானையையே தலைக்கு குடையாக போட்டபடி மழையில் நனைந்தபடி இடியாப்பம் விற்றுச் செல்லும் மூதாட்டியை பார்க்க முடிகிறது ,பால் பாக்கெட் அதே விலையில் கிடக்கிறது,‛ஒகோ நம்ம ஊரு ரொம்ப ஜோரு'என்ற சத்தமிடும் வண்டிகளைக் காணோம்,வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாமல், தெரிந்து கொள்ள விரும்பாமல் டி20 கிரிக்கெட்டில் நமீபியா,ஆப்கானிஸ்தான் விளயைாடுவதையும் நகம் கடித்தபடி சீரியசாக ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE