பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்

Added : நவ 07, 2021
Share
Advertisement
மழை: 120 ஆண்டு சாதனைதிருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த மாதம் பலத்த மழை கொட்டியது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, 'கேரளாவில் கடந்த 120 ஆண்டுகளில் அக்., மாதம் 20 முதல் அதிகபட்சம் 40 செ.மீ., வரை மழை பதிவாகும். நடப்பாண்டு இது 58.9 செ.மீ., ஆக பதிவாகி உள்ளது. இது, 1901ம் ஆண்டிற்கு பின் பெய்த மிக அதிக மழையாக இருக்கிறது' என்றனர்.மருத்துவமனை மீது புகார்புனே:

மழை: 120 ஆண்டு சாதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த மாதம் பலத்த மழை கொட்டியது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, 'கேரளாவில் கடந்த 120 ஆண்டுகளில் அக்., மாதம் 20 முதல் அதிகபட்சம் 40 செ.மீ., வரை மழை பதிவாகும். நடப்பாண்டு இது 58.9 செ.மீ., ஆக பதிவாகி உள்ளது. இது, 1901ம் ஆண்டிற்கு பின் பெய்த மிக அதிக மழையாக இருக்கிறது' என்றனர்.

மருத்துவமனை மீது புகார்

புனே: மஹாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்ட மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் பலியாகினர். இதுகுறித்த விசாரணைக்கு ஏழு பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 'மருத்துவமனை நிர்வாகம், நாங்கள் அளித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றவில்லை' என தீயணைப்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

பா.ஜ., பிரமுகர் கொலை

காந்தி: மேற்கு வங்கத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டம் பகபன்பூர் பகுதியில் உள்ள ஆற்றில், முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி சம்பு மைதி, கத்திக்குத்து காயங்களுடன் நேற்று பிணமாக கிடந்தார். தங்கள் கட்சியைச் சேர்ந்த சம்புவை, திரிணமுல் காங்., தொண்டர்கள் கொன்றதாக பகபன்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டி உள்ளார்.

51 கி.மீ., பயணித்த 'ட்ரோன்'

புதுடில்லி: ஹரியானாவில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் தங்கள் 'பைப்லைன்' சோதனைக்காக, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்தியது. அதை தயாரித்த நிறுவனம், 'நாட்டில் இதுவரை ஒரே நேரத்தில் 42 கி.மீ., மட்டுமே ட்ரோன் பறந்துள்ளதாக தெரிகிறது. 'எங்கள் தயாரிப்பான 'ஆம்னி ஹன்சா வி5 ட்ரோன்' 51 கி.மீ., தடையின்றி சென்றுள்ளது, உள்நாட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனை. இதை 100 - 200 கி.மீ., வரை பறக்கும் திறன் உடையதாக மாற்ற விரும்புகிறோம்' என கூறி உள்ளது.

கையெறி குண்டுகள் சிக்கின

மங்களூரு: கர்நாடகாவின் மங்களூரை அடுத்த பெல்தங்கடியில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சிலர் நேற்று முன்தினம் நடை பயிற்சி மேற்கொண்டனர். அங்குள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டின் அருகே, ராணுவ ஆயுத தொழிற்சாலையில் 1980ல் தயாரான ஐந்து கையெறி குண்டுகளை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து குண்டுகளை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்கு அனுப்பியதுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் விலை குறைப்பு

சண்டிகர்: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தன. இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் 5 ரூபாயும் குறைக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நேற்று அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X