ஸ்ரீநகர்-காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தானில் மருத்துவப் படிப்பு படிக்க பணம் பெற்று, அதை பயங்கரவாத குழுக்களுக்கு வழங்கிய விவகாரத்தில், ஹுரியத் அமைப்பின் தலைவர் உட்பட ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்ய, மத்திய உள்துறையின் அனுமதியை போலீசார் கோரியுள்ளனர்.

விசாரணை
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்பில் சேர, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களிடம் பணம் பெறப்பட்டது கடந்த ஆண்டு தெரியவந்தது. இது தொடர்பாக காஷ்மீர் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர்.கடந்த ஆகஸ்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், பல்வேறு பெயர்களை அவர்கள் தெரிவித்தனர். இதில் இருவர் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளனர்.மேலும், ஹுரியத் அமைப்பைச் சேர்ந்தவரும், வழக்கறிஞருமான முகமது அக்பர் பட் என்பவர் உட்பட ஒன்பது பேருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாணவர்களிடம் 10 - 12 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று, அவர்களுக்கு பாக்., பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான இடம் வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் உறுதியானது.

நடவடிக்கை
இந்த பணம், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவியாக அளிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.இதையடுத்து, ஹுரியத் அமைப்பின் தலைவர் உட்பட ஒன்பது பேர் மீது, யு.ஏ.பி.ஏ., எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஜம்மு - காஷ்மீர் போலீசார் அனுமதி கோரியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE