சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

விஷயம் தெரிந்தால் பேசுங்கள்!

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிலர் தன்னை, அதிபுத்திசாலி என நினைத்தபடி பேசுவர்; ஆனால், அவர்கள் அடிமுட்டாள் என்பது, வாய் திறந்து பேச துவங்கியவுடனேயே தெரிந்து விடும். அந்த பட்டியலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் அடக்கம்.'நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமிழில் தான் பாடினர். வடமாநிலங்களில்
 இது உங்கள் இடம்

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிலர் தன்னை, அதிபுத்திசாலி என நினைத்தபடி பேசுவர்; ஆனால், அவர்கள் அடிமுட்டாள் என்பது, வாய் திறந்து பேச துவங்கியவுடனேயே தெரிந்து விடும். அந்த பட்டியலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் அடக்கம்.'நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமிழில் தான் பாடினர். வடமாநிலங்களில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் உண்டா?' என கேட்கிறார்.

மேலும் அவர், ஹிந்து மதத்தில் இருந்து வெளியேறி சைவம், வைணவத்துக்கு வரச் சொல்லுகிறார். இவரைப் பொறுத்தவரை, சைவமும், வைணவமும் ஹிந்து மதத்தை சார்ந்தது இல்லை.இது வடிகட்டின முட்டாள்தனம்!மதம் பற்றியும் தெரியவில்லை; தமிழ் இலக்கியம் குறித்தும் தெரியவில்லை சீமானுக்கு.

தமிழகத்தைச் சேர்ந்த அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்க வாசகர், ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், அருணகிரிநாதர், அபிராமி பட்டர் ஆகியோர், தமிழில் இறைவனை போற்றினர்.வடமாநிலத்தைச் சேர்ந்த துளசிதாசர், கபீர்தாஸ், பக்த ராம்தாஸ் போன்ற மகாநுபாவர்கள், அவர்களது தாய்மொழியில் இறைவனை போற்றினர். இறைவனைத் துதித்து, அவரவர் தங்கள் தாய்மொழியில் பாமாலைகள் இயற்றியுள்ளனர்.

சைவம், வைணவம் என்பது ஹிந்து என்ற பெரிய விருட்ஷத்தின் இரண்டு கிளைகள். ஆதிசங்கரர், 72 பிரிவுகளாக இருந்த ஹிந்து மதத்தை சுருக்கி, ஆறு மதங்களாக்கினார். விநாயகரை வணக்கும் பிரிவு காணாபத்தியம்; முருகன் வழிபடுவோர் கவ்மாரம்; சக்தியை வணங்கும் பிரிவு சாக்தம்; சிவனை வழிபடும் பிரிவு சைவம்; விஷ்ணுவை ஆராதிக்கும் பிரிவு வைஷ்ணவம்; சூரியனைத் தொழுவது சவ்ரம் என்று ஆறு வகைப்படுத்தினார்.ஆக, சைவமும், வைஷ்ணவமும் ஹிந்து மதத்தின் கிளைகள் தான்.சீமான் அவர்களே... உங்கள் அதிமேதாவித்தனத்தை அரசியலோடு நிறுத்திக் கொண்டால் நல்லது.

ஆன்மிகம், இலக்கியம் பற்றி கருத்து சொல்லும் போது, அந்தந்த துறை சார்ந்த அறிஞர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும்.எல்லாருக்கும் எல்லாம் தெரியாது. எனவே நமக்கு தெரியாதவற்றை, தெரிந்தோரிடம் கேட்டு அறிந்து கொள்வதில் தவறில்லை. இப்படி தவறான செய்தி கூறி, 'காமெடி பீஸ்' ஆகாதீர்கள்!


இதில் விலக்குஅளிக்கக் கூடாது!எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விமான நிலையத்தில் தன்னிடம் நடந்த சோதனை குறித்து, பரதநாட்டிய கலைஞர் சுதா சந்திரன் வருத்தத்துடன் சமூக வலைதளத்தில் தகவல் பதிவு செய்துள்ளார்.அவர் என்ன பதிவு செய்திருக்கிறார் என்றால்...'நான் செயற்கைக் கால்களை பொருத்தியபடியே நடனமாடி வரலாறு படைத்திருக்கிறேன்.

விமான நிலையத்தில் என் செயற்கை காலை வெடிகுண்டு பரிசோதனை கருவியை வைத்து பரிசோதிக்கும்படி, மத்திய பாதுகாப்பு படையினரிடம் கேட்கிறேன். ஆனால் அவர்கள், என் செயற்கை காலை நீக்கிக் காட்டச் சொல்கின்றனர். இது ஏற்புடையது அல்ல' என கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு படை, 'டுவிட்டர்' பதிவில், 'சுதா சந்திரனுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மிகவும் வருந்துகிறோம்' என தெரிவித்துள்ளது.நம் நாட்டின் பாதுகாப்பிற்காக, விமான நிலையத்தில் சோதனை நடத்தப்படுகிறது.சுதா சந்திரன் செயற்கை கால் பொருத்தியபடி நடனமாடுகிறார் என்பதற்காக, இவருக்கு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க முடியாது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக, யாருக்கும் விதிவிலக்கு அளிக்கக் கூடாது.

இவ்வுலகில், தவறே செய்ய மாட்டார் என யாரையும் குறிப்பிட முடியாது.அசாமில் நடந்த சோதனையின் போது, 1 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஹெராயின்' போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் மூன்று பேர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

சுதா சந்திரன் நேர்மையானவராக இருக்கலாம். ஆனால், சுதா சந்திரனின் நெருங்கிய நண்பர், உறவினர் யாரோ ஒருவர், இவருக்கு தெரியாமலேயே செயற்கை காலில் சட்டத்திற்கு புறம்பான பொருளை மறைத்து வைக்க வாய்ப்புள்ளது.எனவே, சுதா சந்திரன் போன்ற பெருமை மிக்க மாற்றுத் திறனாளிகள், விமான நிலையங்களில் நடக்கும் சோதனைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்தது.மாற்றுத் திறனாளிகளுக்கு சோதனையில் சலுகையோ, விலக்கோ கொடுத்தால், கடத்தல்காரர்களும், பயங்கரவாதிகளும் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

அதே நேரம் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொள்ளும்போது, பயணியருக்கு மரியாதை குறைவோ, பாதிப்போ ஏற்படாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.


பாராட்டுவோம்; ஊக்குவிப்போம்!


-பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

திருச்சியில், எளிய விவசாயக் கூலி குடும்பத்தைச் சேர்ந்த, அரசுப் பள்ளியில் படித்த அருண்குமார் என்ற மாணவர், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் 98.24 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்; அவருக்கு பாராட்டுகள்!முதல்வர் ஸ்டாலின், அந்த மாணவரை நேரில் அழைத்து பாராட்டியதுடன், அவரின் கல்விச் செலவு அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என அறிவித்து, உற்சாகப்படுத்தி உள்ளார்.

அவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, திருச்சி, என்.ஐ.டி, மாணவர்களுக்கும் இதில் பெரும் பங்குண்டு.பெரம்பலுார் கலெக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் வார இறுதி நாட்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி., பயிற்சி அளித்துள்ளனர்.அவர்களிடம் பயிற்சி பெற்ற 30க்கும் மேற்பட்ட மாணவர்களில் பலர், பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.தாங்கள் படிக்கும் போதே, அந்த வாய்ப்பு கிடைக்காத மற்ற மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதென்பது, உயர்வான செயல். திருச்சி என்.ஐ.டி., மாணவர்கள் அந்த சிறந்த பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் அருண்குமார் சாதிக்க, கோவை ரொட்டி கவுண்டனுாரைச் சேர்ந்த சங்கவி என்ற பழங்குடி மாணவி உறுதியுடன் நின்று, இரண்டாம் முறையாக, 'நீட்' தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.ஏழ்மையையும், புறக்கணிப்பையும், தோல்வியையும் கடந்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.இந்த நம்பிக்கை நட்சத்திரங்களை பாராட்டுவோம். தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றி பெற, நம் மாணவர்களை ஊக்குவிப்போம்.!

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-நவ-202119:50:40 IST Report Abuse
D.Ambujavalli ஆயிரம் , சில மையங்களுக்கு லட்சக்கணக்கில் கூட கொட்டி, ஆறாம் வகுப்பிலிருந்தே பயிற்சி அளிக்கும் இடங்களை அணுக முடியாத இத்தகைய மாணவர்களின் கனவையும் நனவாக்க முன்வந்த திருச்சி மாணவ மணிகளுக்கும் நம் பாராட்டு உரியதாகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X