பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... கால்நடைகளால் இம்சை

Added : நவ 08, 2021
Share
Advertisement
வால்பாறை நகரில், சமீப காலமாக கால்நடைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பொள்ளாச்சி ரோட்டில் ஆடு, மாடு, நாய் போன்றவை நடமாடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், ரோட்டில் கட்டுப்பாடின்றி உலா வரும் கால்நடைகளால், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகளும்
 செய்திகள் சில வரிகளில்... கால்நடைகளால் இம்சை

வால்பாறை நகரில், சமீப காலமாக கால்நடைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பொள்ளாச்சி ரோட்டில் ஆடு, மாடு, நாய் போன்றவை நடமாடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், ரோட்டில் கட்டுப்பாடின்றி உலா வரும் கால்நடைகளால், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகளும் இதை கண்டு கொள்வதில்லை.வால்பாறை நகரில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், இடையூறாக ரோட்டில் நடமாடும் கால்நடைகளை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.
வேளாண் இணை இயக்குனர் ஆய்வு

கிணத்துக்கடவு வட்டாரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கிராமங்களில், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, வேளாண் வளர்ச்சி திட்டம் முடுக்கி விடப்பட்டுள்ளது.இதில், தேவராயபுரத்தில், தரிசு நிலத்தை விளைநிலமாக்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. தரிசு நில மேம்பாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனத்திட்டம்) ஷபி அகமது, நேற்று முன்தினம் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தரிசு நிலமாக காணப்படும் நிலத்தை, விளை நிலமாக மாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வட்டார வேளாண் உதவி இயக்குனர், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை, கால்நடை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் தரிசு நிலத்தின் உரிமையாளர்கள் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

குளங்களில் நீர் நிரப்பணும்!

கோவை மாவட்ட கலெக்டருக்கு, பொள்ளாச்சி தி.மு.க., எம்.பி., சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆழியாறு, திருமூர்த்தி, அமராவதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், தொடர் மழை பெய்து வருகிறது. அனைத்து அணைகளும் முழுகொள்ளளவை எட்டியுள்ளது.
அதேசமயம், சிறிய மற்றும் பெரிய குளங்களின் நீர் வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், மழை பெய்தும் குளங்கள் நிரம்பாமல் உள்ளன. டிச., வரையில் தொடர் மழை கிடைக்க வாய்ப்புள்ளதால், இந்த மூன்று அணைகளுக்கு வரும் உபரி நீரை வீணாக்காமல், குளங்களுக்கு திறந்து விட வேண்டும். குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.
மின் உற்பத்தி அதிகரிப்பு
வால்பாறையில் அணைகளின் நீர் இருப்பை பொறுத்து, காடம்பாறை நீரோற்று மின் திட்டத்தில், தினமும், 400 மெகாவாட் மின் உற்பத்தியும், சோலையாறு அணையில், 84 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.இந்நிலையில், வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையால், பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் நிரம்பின. தற்போது, வடகிழக்குப் பருவமழை பெய்யும் நிலையில், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனிடையே அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.54 அடியாக இருந்தது. பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 70.99 அடியாகவும், ஆழியாறு அணையின் நீர்மட்டம், 118.70 அடியாகவும் இருந்தது.

'பார்' ஆன பள்ளி வளாகம்!

ஆனைமலை அடுத்த சோமந்துறைசித்துார் அரசு துவக்கப்பள்ளி வளாகத்துக்கு, இரவு நேரங்களில் வரும் 'குடி'மகன்கள், குடி போதையில் மது பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர்.மாணவர்களுக்காக பொருத்தப்பட்டுள்ள குடிநீர் மற்றும் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கான குழாய்கள் அருகில், காலி மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.மேலும், பள்ளி வளாகத்தில் கஞ்சா புகைப்பது உள்பட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது குறித்து, பள்ளி நிர்வாகம் புகார் கொடுத்தும், கோட்டூர் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனமாக உள்ளனர். பள்ளி வளாகத்தில் 'குடி'மகன்கள் தொல்லையை போக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில் கழிவுகள்
மடத்துக்குளம் அமராவதி ஆற்றுபாலம், திருப்பூர்-- திண்டுக்கல் மாவட்ட எல்லைகளை இணைக்கும் இடமாக உள்ளது. மடத்துக்குளம் நகரத்தின் கிழக்கு நுழைவாயில் பகுதியாக உள்ளது.இவ்வளவு முக்கியமான இந்த இடத்தில் பல லோடு குப்பை, இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பாலத்திலிருந்து பல நுாறு மீட்டர் தொலைவிற்கு, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், துர்நாற்றம் வீசுகிறது.இங்கு கொட்டப்படும் இறைச்சி கழிவுகளுக்காக வரும் நாய்கள், சண்டையிட்டு திடீரென, சாலையின் குறுக்கே பாய்வதால் தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது.இங்கு, குப்பை, கழிவுகள் கொட்டக்கூடாது என பேரூராட்சியினர் எச்சரிக்கை பலகை வைத்தும், அதை அலட்சியப்படுத்தும் விதமாக கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.இப்பிரச்னைக்கு தீர்வாக, இங்கு கண்காணிப்பு கேமரா அமைத்து, இறைச்சி மற்றும் இதரக்கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.
பஸ்களில் திருடர்கள் உஷார்
கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பழநி, மதுரை என, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், உடுமலை மார்க்கமாக செல்கின்றன. அவ்வகையில், தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் பலரும், மீண்டும் அவரவர் குடியிருக்கும் நகரங்களும் திரும்பி வருகின்றனர். இதனால், கடந்த இரு தினங்களாக பஸ்களில், கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, உடுமலை பஸ் ஸ்டாண்டில், ஜேப்படி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.
பயணிகள் கூறுகையில், 'கூட்ட நெரிசல் மற்றும் பஸ்சில் இடம் பிடிக்க முண்டியடிக்கும் பயணிகளின் அவசர நிலையை திருடர்கள் பயன்படுத்துகின்றனர். பணப்பையை திருடியதும், ஊர்ந்து செல்லும் பஸ்சில் இருந்து இறங்கி, தப்பி விடுகின்றனர். பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஏராளமான அறிவிப்புகள் இடம் பெற வேண்டும்,' என்றனர்.
ரோட்டில் சீரமைப்பு பணி குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அடிவள்ளி கிராம இணைப்பு ரோட்டில், பி.ஏ.பி., கால்வாய் குறுக்கிடுகிறது. கால்வாய் மீது புதிதாக பாலம் கட்டப்பட்ட நிலையில், பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல தார்ரோடு போடவில்லை. இதனால், அங்கு மண் குவிந்து, மழையால், அப்பகுதி சேறும், சகதியுமாக மாறியது.பாலத்தின் வழியாக சென்ற வாகனங்கள், சேற்றில் சிக்கி, பிற வாகனங்கள், பல கி.மீ., துாரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து 'தினமலரில்' செய்தி வெளியானது.இதையடுத்து, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினர், சேறும், சகதியுமாக இருந்த பகுதியில், கிராவல் மண் கொட்டி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.இதனால், வாகனங்கள், சேற்றில் சிக்காமல், பாலத்தை கடந்து செல்கின்றன. விரைவில், அப்பகுதியில், தடுப்புச்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
மா.கம்யூ., கொடியேற்று விழா
உடுமலை அருகே குரல்குட்டையில், மா.கம்யூ., சார்பில் நடந்த, கட்சி கொடியேற்று விழாவிற்கு ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வடக்கு கிளைச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.மா.கம்யூ., கட்சி கொடியை, தெற்கு கிளைச்செயலாளர் தட்சிணாமூர்த்தியும், டி.ஓய்.எப்.ஐ., கொடியை மகேந்திரனும் ஏற்றி வைத்தனர்.நவம்பர் புரட்சி நாள் குறித்து, உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ் பேசினார். கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X