ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 'சூழல் சுற்றுலா' திட்டத்தை வனத்துறையினர் துவங்கியுள்ளனர். 'ஹார்ன்பில்' திருவிழா என்ற 'மினி டூர்' அறிவித்து, 'புக்கிங்' துவங்கியுள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன.
இவற்றில் சூழல் சுற்றுலா திட்டத்தில், அனைத்து வனச்சரகங்களிலும் தங்கும் விடுதிகள், டாப்சிலிப் யானை சவாரி, மூலிகை பூங்கா, ஆழியாறு வண்ணத்துப்பூச்சி பூங்கா, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் அமைத்துள்ளனர்.இந்நிலையில், புலிகள் காப்பகத்தில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, வாரம் ஒரு முறை, சுற்றுலா பயணிகளை வனச்சரக பகுதிகளிலுள்ள இடங்களுக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர்.
முதற்கட்டமாக, 'ஹார்ன்பில்' திருவிழா என்ற தலைப்பில், வரும், 13ம் தேதி 'மினி டூர்' அறிவித்துள்ளனர். காலை, 9:00 மணிக்கு ஆழியாறு வண்ணத்துப்பூச்சி பூங்காவில் துவங்கி, கவியருவி, ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு காட்சிமுனை, வரையாடுகளின் வாழிடங்கள், அட்டகட்டி பயிற்சி மையத்தில் 'ஹார்ன்பில்' வாழிடம், வாழ்க்கை முறை அவற்றின் அடர்த்தி குறித்த ஆவணப்படம் காண்பித்து, அட்டகட்டி ஆர்கிட்டோரியத்துடன் பயணம் முடிகிறது.மாலை, 6:00 மணிக்குள் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் ஆழியாறுக்கு கொண்டு வந்து விடுவர்.
சுற்றுலா பயணிகள் தலா, 500 ரூபாய் செலுத்தி இத்திட்டத்தில் பயணிக்கலாம்.சூழல் சுற்றுலாவுக்கு, 94425 47654, 75984 99420 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வரும், 11ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். வனத்துறையினர் விரைவில் இத்திட்டத்தை விரிவுபடுத்தி, சுற்றுலா பயணிகள் சூழல் சார்ந்த கல்வியுடன் இயற்கையான பகுதிகளில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தர உள்ளனர்.வனத்துறையினரின் இந்த முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், புலிகள் காப்பகத்தில் சூழல் சுற்றுலா மேம்படும், இயற்கை பாதுகாக்க வேண்டுமென்ற மனநிலை மக்களிடையே அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனபாதுகாவலர் செல்வம் கூறியதாவது:மாதம் ஒரு முறை, 'ஹார்ன்பில்', வரையாடுகள், புள்ளி மான், யானை, சிறுத்தை என ஒவ்வொரு வனவிலங்குகள் பெயரில் திருவிழா போன்று, சூழல் சுற்றுலா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.வனவிலங்குகள் குறித்த தகவல்கள், ஆவணப்படம் காண்பித்து, தாவரங்கள், காடு மற்றும் காட்டுயிர்கள் குறித்த முழு தகவல்களையும் மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரிடத்திலும் வனம், வனவிலங்குகள் மீதான அன்பை அதிகரித்து, இயற்கை பாதுகாப்பு குறித்த புரிதலை அதிகரிக்க உள்ளோம். இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும், விரைவில் வாரம் ஒரு முறை சூழல் சுற்றுலா நடத்தப்படும்.இவ்வாறு, தெரிவித்தார்.சூழல் சுற்றுலாவுக்கு, 94425 47654, 75984 99420 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வரும், 11ம் தேதிக்குள் பதிவு செய்து, தலா, 500 ரூபாய் செலுத்தி இத்திட்டத்தில் பயணிக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE