கடலுார் : கடலுார் மாவட்டத்தில் உரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 12 உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் துணை இயக்குனர், உதவி இயக்குனர்கள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் 13 கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 253 தனியார் உர விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். இருப்பு சரியாக பராமரிக்காத 12 உர விற்பனை நிலையங்களுக்கு 7 நாட்கள் விற்பனை தடை விதிக்கப்பட்டது.விலைப்பட்டியல், பெயர் பலகை, இருப்பு விவரத்தை சரியாக பராமரிக்காத 31 தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு விளக்கம் கேட்டும், 3 தனியார் உர விற்பனை நிலையங்களின் விற்பனை உரிமத்தை தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டது. விற்பனையாளர்கள் உர இருப்பினை சரியாக பராமரித்து அதிகபட்ச சில்லரை விலைக்கு மிகாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். யூரியா மற்றும் டி.ஏ.பி., உரத்துடன் வேறு எந்த பொருளையும் விவசாயிகள் விருப்பமின்றி விற்கக்கூடாது.உர பதுக்கல் தொடர்பாக புகார்கள் வந்தால், உரவிற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என, வேளாண் துறை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE