டீசல் விலை குறைப்பு அரசின் ஆறுதல் பரிசு!| Dinamalar

டீசல் விலை குறைப்பு அரசின் ஆறுதல் பரிசு!

Added : நவ 08, 2021
Share
இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவும், கச்சா எண்ணெய் தேவையை பெருமளவு இறக்குமதி வாயிலாகவே தீர்த்து வருகின்றன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின், பல நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ற உற்பத்தி இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால், அதன் விலை குறைந்து விடும் என்பதால், உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் வள நாடுகள் மறுத்து வருகின்றன.
 டீசல் விலை குறைப்பு அரசின் ஆறுதல் பரிசு!

இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவும், கச்சா எண்ணெய் தேவையை பெருமளவு இறக்குமதி வாயிலாகவே தீர்த்து வருகின்றன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின், பல நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது.

ஆனால், அதற்கேற்ற உற்பத்தி இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால், அதன் விலை குறைந்து விடும் என்பதால், உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் வள நாடுகள் மறுத்து வருகின்றன. இதனால், விலை கடுமையாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருவதால், அந்த விலை உயர்வை மக்கள் மீது சுமத்தி வருகின்றன. பல நாட்களாக தினமும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வந்தன.

தீபாவளிக்கு முந்தைய நாள், நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் 120; டீசல் விலை 110 ரூபாயை எட்டின.இதனால், சாதாரண மக்களின் சுமையை குறைக்கும் வகையில், தீபாவளி பரிசாக, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்து, 3ம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், வாகன ஓட்டிகளின் மாதாந்திர பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வந்த நிலையில், மத்திய அரசின் விலை குறைப்பு, அனைத்து தரப்பினருக்கும் பெரும் ஆறுதலாக அமைந்தது.

மத்திய அரசை பின்பற்றி, பா.ஜ., ஆளும் மாநிலங்கள் உட்பட,22க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியான, 'வாட்'டை குறைத்து, பொதுமக்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என, பல மாதங்களாக பல தரப்பிலும் கோரிக்கை விடுத்தும், அதை கண்டு கொள்ளாமல் இருந்த மத்திய அரசு, தீபாவளி நேரத்தில், அதுவும் பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பா.ஜ., பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், விலை குறைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐந்து மாநில தேர்தலை கருத்தில் கொண்டும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவால், நடப்பு நிதியாண்டின் மீதியுள்ள மாதங்களில், 40 - 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, மத்திய அரசுக்கு வரி வருவாய் பாதிக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, பெருமளவுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு, நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த நேரத்தில், கூடுதல் வருவாயை திரட்டுவதற்காக,2020மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, 13 மற்றும் 13 ரூபாய் அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியது.

சர்வதேச சந்தையில் அப்போது கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்திருந்த நேரத்தில், இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டது. இதனால், 2020 - 21ம் நிதியாண்டில், மத்திய அரசின் கலால் வரி உயர்வு, 88 சதவீதம் அதிகரித்தது. கடந்த ஆண்டு உயர்த்திய வரி உயர்வு அளவுக்காவது, மத்திய அரசு இப்போது விலையை குறைக்க வேண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். இருந்தாலும், தற்போதைய விலை குறைப்பு மக்களுக்கு ஆறுதல் தருவதாகவே உள்ளது.

அதே நேரத்தில், சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 3 ரூபாயும் குறைக்கப்படும் என, அக்கட்சியின் தேர்தலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியில்,பெட்ரோல் மீதான விலை மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய்குறைக்கப்பட்டது; டீசல் விலை குறைக்கப்படவில்லை. எனவே, மற்ற மாநிலங்களைப் பின்பற்றி, தமிழக அரசும் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. அதை, தமிழக அரசு செய்ய வேண்டும்.

அத்துடன், வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களுக்கான விலை இந்த மாதம் உயர்த்தப்படவில்லை என்றாலும், ஒரு சிலிண்டரின் விலை 915 ரூபாயை தாண்டி விட்டது.இதுவும் நடுத்தர மற்றும் சாதாரண மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காஸ் விலையையும் குறைக்க, பிரதமர் மோடி அரசு முன்வர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X