பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்; டோல்கேட்டில் அணிவகுத்த வாகனங்கள்| Dinamalar

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்; டோல்கேட்டில் அணிவகுத்த வாகனங்கள்

Added : நவ 08, 2021
Share
கிருஷ்ணகிரி: ஓசூர், கிருஷ்ணகிரியிலுள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்களில் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். அவர்கள், தீபாவளிக்கு கிடைத்த தொடர் விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். நேற்று விடுமுறை முடிந்த நிலையில் அனைவரும் திரும்பினர். மேலும், பெங்களூரு, குப்பம் செல்ல கிருஷ்ணகிரி வழியாகவே மக்கள் செல்ல முடியும். இன்று(திங்கட்கிழமை)

கிருஷ்ணகிரி: ஓசூர், கிருஷ்ணகிரியிலுள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்களில் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். அவர்கள், தீபாவளிக்கு கிடைத்த தொடர் விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். நேற்று விடுமுறை முடிந்த நிலையில் அனைவரும் திரும்பினர். மேலும், பெங்களூரு, குப்பம் செல்ல கிருஷ்ணகிரி வழியாகவே மக்கள் செல்ல முடியும். இன்று(திங்கட்கிழமை) பணிக்கு திரும்ப வேண்டி உள்ளதால், நேற்று அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பினர். இதனால், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை முதல் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. போதிய பஸ்கள் இல்லாததால் மக்கள் நின்று கொண்டும், படிகளில் தொங்கியபடியும் சென்றனர். குறிப்பாக ஓசூர், பெங்களூருக்கு போதிய பஸ்கள் இன்றி பயணிகள் வெகுநேரம் காத்துக் கிடந்தனர். போக்குவரத்து அதிகாரிகள் எந்த வழித்தடத்தில் அதிக பயணிகள் உள்ளனரோ அதற்கு மாற்றுப்பேருந்து ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுத்தனர். கிருஷ்ணகிரி, டோல்கேட்டிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


பணிக்கு திரும்பிய மக்கள்: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பலர், வெளியூர் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி விடுமுறையில் சொந்த ஊர் வந்த அவர்கள், விடுமுறையை முடிந்ததையடுத்து நேற்று பணிபுரியும் பகுதிகளுக்கு திரும்பினர். இதனால், நேற்று தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தள்ளு முள்ளு: நேற்று காலை, 7:00 மணி முதல், அரூர் பஸ் ஸ்டாண்டில், ஏராளமானோர் குவிந்தனர். பஸ் இருக்கையில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறியதால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது. மாணவ, மாணவியரை வழியனுப்ப அவர்களது பெற்றோரும் உடன் வந்ததால், அரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் விடுமுறை முடிந்து வெளியூர் செல்ல நேற்று காலை, 8:30 மணி முதல், மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கினர்.

போக்குவரத்து நெருக்கடி: தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில், கர்நாடகா வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று தங்களது கார், டூவீலர் மற்றும் பஸ்களில் தமிழகத்திலிருந்து, கர்நாடகா திரும்பினர். இதனால், அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி டோல்கேட், போக்குவரத்து நெருக்கடியில் ஸ்தம்பித்தது. அம்மாநில டோல்கேட்டிலிருந்து, தமிழக எல்லையான ஜூஜூவாடியிலுள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் வரை, 1.5 கி.மீ., தூரம், ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதனால், அத்திப்பள்ளி டோல்கேட்டை கடக்க நீண்ட நேரமானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். ஒரே நேரத்தில் தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு மக்கள் திரும்பியதால், இந்நிலை ஏற்பட்டதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X