திண்டிவனம் : திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள பகுதி வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், திண்டிவனம் ஏ.எஸ்.பி., அபிேஷக் குப்தா மேற்பார்வையில், ரோஷணை இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், திண்டிவனம் பழைய நகராட்சி அருகே, பழைய நகைகளை விற்பதற்கு மர்ம நபர் முயன்றதாக ரோஷணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தி, நகையை விற்க முயன்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மலை கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மகன் செல்வராஜ், 39; என்பதும், திண்டிவனம் பகுதியில் பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, செல்வ ராஜை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 13 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 55 சவரன் நகைகளை பறிமுதல் செய் தனர்.
தொழில் செய்ய கொள்ளை
கைது செய்யப்பட்டுள்ள செல்வராஜ், திண்டிவனம் உட்கோட்டத்தில் 6 இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பகல் நேரங்களில், வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரங்களில், கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். சொந்த ஊரில் பன்றி விற்கும் தொழில் செய்து வந்த அவருக்கு, மேலும், தொழிலை விரிவுபடுத்த பணம் தேவைப்பட்டதால், தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசில் தெரிவித்துள்ளார்.
கொள்ளையடித்த நகைகளை விற்று செலவழித்தது போக, மீதியிருந்த 55 சவரன் நகைகள் மட்டுமே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் மீது சென்னை, பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE