அரசியலும், ஆடும்...!
கர்நாடகாவில் சமீப காலமாக ஆட்டுக்குட்டியை வைத்து நடக்கும் அரசியல், நகைச்சுவையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.இங்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இரண்டு சட்டசபை தொகுதிகளில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் குருபா என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களது குலத் தொழில் ஆடு மேய்ப்பது. தேர்தலில் இவர்களது ஓட்டுகளை பெறுவதற்காக அரசியல்வாதிகள் நடத்திய கலாட்டா தான், இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
பிரசாரத்தின்போது முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவை கடுமையாக தாக்கிப் பேசினார். 'தோளில் கம்பளி துண்டை போர்த்தியபடி சுற்றினால், குருபா சமூகத்தினரின் ஓட்டுகளை பெற முடியாது. அந்த சமூகத்தினருக்காக காங்கிரஸ் என்ன செய்தது...' என, கேள்வி எழுப்பினார்.சித்தராமையாவோ, 'குருபா சமூகத்தினரின் உண்மையான தோழன், நான் தான். எங்கள் வீட்டில் ஏராளமான ஆடுகளை வளர்க்கிறோம்' என்றார். முன்னாள் முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி, 'எங்கள் பண்ணை வீட்டிற்கு வந்து பாருங்கள்; தோட்டம் முழுதும் ஆடுகள் தான். நாங்கள் தான் குருபா சமூகத்தினருக்கு
ஆதரவானவர்கள்' என்றார்.கர்நாடக மக்களோ, 'கடவுளே, இந்த அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கிய ஆடு, படாத பாடு படுகிறதே' என, புலம்புகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE