தேனி : ''முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசிடம் தமிழக உரிமையை விட்டு கொடுத்த முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும்'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
முல்லை பெரியாறு அணை உரிமை மீட்பு என்ற பெயரில் தேனி கலெக்டர் அலுவலகம் முன் தமிழக பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:தமிழக அரசின் பராமரிப்பில் கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணை பென்னிகுவிக்கால் ஐந்து மாவட்ட மக்களுக்காக கட்டப்பட்டது. கட்டுமான பணியில் தமிழர்கள் ஈடுபட்டனர்.
அணையில் தமிழகத்துக்கு 999 ஆண்டு ஒப்பந்தம் உள்ளது. 152 அடி நீர் தேக்க திட்டமிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி நீர்தேக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை மூலம் கோபாலபுரம் குடும்பத்தினர் பயனடையவில்லை. இதனால் ஸ்டாலின் அலட்சியம் செய்கிறார். 80 வயதில் ஆய்வு செய்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார்.
தமிழக உரிமையை பறிகொடுக்காமல் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்காது.பேபி அணைக்காக மரங்கள் வெட்ட கேரள அரசு அனுமதி கொடுத்ததா, இல்லையா என்பது தெரியாமல் ஸ்டாலின், கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக முதல்வர் தமிழக மக்களை அவமானப்படுத்தியுள்ளார்.
மன்னிப்பு
கடந்த 2014, 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் அணையில் 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது. தி.மு.க, ஆட்சிக்கு வந்தவுடன் இது மாறியுள்ளது. அணை உரிமையை கேரளாவுக்கு விட்டு கொடுத்ததற்காக ஸ்டாலின் விவசாயிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும்.சென்னைக்கு வெள்ள அபாயம் உள்ளதாக மத்திய அரசு என்.ஐ.ஓ.டி. ரேடார் மூலம் கணித்து மூன்று மாதங்களாக தமிழக அரசை எச்சரிக்கை செய்தது. இதை ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.
வெள்ளம் ஏற்படாமல் தடுக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது அறியாமல் எம்.பி., வெங்கடேசன் மத்திய அரசை குற்றம் சாட்டுகிறார்.முதல்வர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போதும் மழைநீரால் சென்னை தத்தளித்தது. தற்போது முதல்வராக இருக்கும் போதும் அதே நிலை தான் நீடிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
சந்திப்பு
பென்னிகுவிக் படத்துக்கு மரியாதை செய்த அண்ணாமலை, முல்லை பெரியாறு அணையை 142 அடி உயர்த்தக் கோரி 2012ல் தீக்குளித்து பலியான ஜெயப்பிரகாஷின் சகோதரி சந்திராவை கவுரவப்படுத்தினார்.
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் தனியாக சந்திந்து 10 நிமிடங்கள் பேசினார். அப்போது முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்த படத்தை பன்னீர்செல்வம் காட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE