தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜாவுக்கும், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கும் இடையேயான மோதலை தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
சங்கரன்கோவில் தொகுதி, குருவிகுளம் ஒன்றியம், சாயமலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற, அத்தொகுதி எம்.எல்.ஏ., ராஜா, அமைச்சர்சுப்பிரமணியனிடம் வலியுறுத்தி உள்ளார்.அம்மருத்துவமனையை, தன் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு கொண்டு வர வேண்டும் என்று வைகோ விரும்புகிறார். ராஜாவுக்கு ஆதரவாக அத்திபட்டி, ராமலிங்காபுரம், கே.ஆலங்குளம், புதுார், வாகைகுளம், நாலுவாசங்கோட்டை, அழகநேரி, சின்னவாகைகுளம், கள்ளிகுளம், மலைப்பட்டி கிராம மக்கள் கூட்டாக, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிஉள்ள மனு:
குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாக மாற்றப்படுவதற்கு பெருமைப்படுகிறோம். மாற்று கட்சி தலைவரின் சூழ்ச்சியால், கலிங்கப்பட்டிக்கு மாற்ற மறைமுக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அமைச்சர் சுப்பிரமணியனுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. எங்கள் உரிமையை விட்டு கொடுப்பது, எங்கள் உயிரை விட்டு கொடுப்பதற்கு சமம். கலிங்கப்பட்டிக்கு மாறினால், பெண்கள் கர்ப்பமான காலத்தில், 20 கி.மீ., துாரம் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
மருத்துவச் சான்று ஏதேனும் பெறவும், 20 கி.மீ., தொலைவிற்கு செல்ல வேண்டும். எனவே, எங்கள் தலைமுறைகள் சிரமம் அடையாமல் இருக்க, கலிங்கப்பட்டிக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை மாறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
சாயமலை, கலிங்கப்பட்டி ஆகிய இரண்டு ஊர்களில், எந்த ஊருக்கு அரசு மருத்துவமனை கொண்டு செல்வது என்ற பிரச்னை, தற்போது அத்தொகுதியை சேர்ந்த இரண்டு சமுதாயத்தினரின் செல்வாக்கை நிரூபிப்பதாக மாறி உள்ளது.அதனால், உளவுத்துறை அறிக்கை அடிப்படையில்,தொகுதியில் நேற்று நடக்கவிருந்த அமைச்சரின் ஆய்வு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -