சென்னை :அமைச்சர் துரைமுருகன் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, முல்லை பெரியாறு அணையை பார்வையிடும் புகைப்படத்தை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.
'முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், 142 அடியை எட்டுவதற்கு முன், கேரளாவுக்கு தண்ணீர் திறந்தது ஏன்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
மேலும், தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் இன்று, மதுரை, தேனி, சிவகங்கை, திருப்பத்துார், ராமநாதபுரம் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.இது தொடர்பாக, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில், '௧௦ ஆண்டுகளில் ஒருமுறை கூட பன்னீர்செல்வமோ, பழனிசாமியோ, முல்லை பெரியாறு அணைக்கு செல்லவில்லை' என்றார்.
அதற்கு விளக்கம் அளித்த பன்னீர்செல்வம், 14 முறை முல்லை பெரியாறு அணைக்கு சென்று வந்துள்ளதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, 'அவர் அணைக்கு சென்று வந்த தேதியை வெளியிடுவாரா?' என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.அதற்கு விரிவாக பதில் அளித்த பன்னீர்செல்வம்,முல்லை பெரியாறு அணையை, தான் ஆய்வு செய்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
'அந்த புகைப்படத்தில்,அப்போதைய அ.தி.மு.க.,தேனி மாவட்ட செயலராக இருந்து, தற்போது தி.மு.க.,வில் உள்ள தங்க தமிழ்செல்வன்அருகில் உள்ளார். அவரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்' என துரைமுருகனுக்கு, பன்னீர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE