பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் வடிகால் செலவு ரூ.2,400 கோடி: சென்னைக்கு இன்னும் கிடைக்கல விடியல்

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னையில் 1918ம் ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவு மழையாக, 108.84 செ.மீ., மழை பெய்தது. 100 ஆண்டுகள் கழித்து வரலாறு காணாத வகையில் 2015ல், ஒரே மாதத்தில் 111.33 செ.மீ., மழை பெய்தது. அதே ஆண்டு டிச., 2ம் தேதி ஒரே நாளில், 31.96 செ.மீ., மழை பெய்து மாநகரை மூழ்கடித்தது.அத்துடன், மாநகரின் புறநகர் பகுதிகளை ஒட்டியுள்ள பெரும்பாலான பகுதிகளில் இருந்தும், சென்னைக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும், செம்பரம்பாக்கம்,
Chennai Rain, Heavy Rain, Chennai Metropolitan

சென்னையில் 1918ம் ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவு மழையாக, 108.84 செ.மீ., மழை பெய்தது. 100 ஆண்டுகள் கழித்து வரலாறு காணாத வகையில் 2015ல், ஒரே மாதத்தில் 111.33 செ.மீ., மழை பெய்தது. அதே ஆண்டு டிச., 2ம் தேதி ஒரே நாளில், 31.96 செ.மீ., மழை பெய்து மாநகரை மூழ்கடித்தது.

அத்துடன், மாநகரின் புறநகர் பகுதிகளை ஒட்டியுள்ள பெரும்பாலான பகுதிகளில் இருந்தும், சென்னைக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேலும், செம்பரம்பாக்கம், செங்குன்றம், பூண்டி ஏரிகளில் இருந்து, நள்ளிரவில் திடீரென அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், அடையாற்றின் ஓரம் வசித்தோர், வெள்ளத்தில் தத்தளித்தனர்.பலர் தங்களது உடைமைகளை இழந்ததுடன், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. மக்கள் செல்ல இடமின்றி, தங்கள் வீட்டு மொட்டை மாடிகளில், உணவு, தண்ணீர் கிடைக்காமல் தஞ்சம் அடைந்தனர்.இந்த பெரும் வெள்ள துயரத்தை தொடர்ந்து, சென்னையில் மழை நீர் வடிகால் கட்டமைக்கும் பணிகள், நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.


5,000 கோடி ரூபாய்


மேலும், மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, உலக வங்கி, ஆசிய வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி, தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிதி வாயிலாக, 5,000 கோடி ரூபாய்க்கு திட்டம் தீட்டப்பட்டது.*இதில், 1,385 கோடி ரூபாய் செலவில், அடையாறு மற்றும் கூவம் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள், 406 கி.மீ., நீளத்துக்கு மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிந்துள்ளன

*தற்போது அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ள மாம்பலம் பகுதியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால், 80 கோடி ரூபாய் செலவில் மாம்பலம் கால்வாய் சீரமைப்பு மற்றும் கரையோர வடிகால் பணிகள் முடிந்துள்ளன

*கொசஸ்தலை வடிநில பகுதியில், 3,220 கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால், 769 கி.மீ., நீளத்துக்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 95 கி.மீ., நீளத்துக்கு, 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிந்துள்ளன. இத்திட்டம் மறுவடிவமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளதால், விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளன

*கோவளம் வடிநில பகுதிகளில், 1,714 கோடி ரூபாய் செலவில், 360 கி.மீ., நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதில், 20 கோடி ரூபாய்க்கு பணிகள் நடைபெற்ற நிலையில், சில பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு மற்றும் பசுமை தீர்ப்பாய தடை காரணமாக, இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, 100 கோடி ரூபாய் செலவில், இதர இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு, 'டெண்டர்' கோரப்பட உள்ளது

*பெரும்பாக்கம் - நுாக்கம்பாளையம் பிரதான சாலையில், 4.3 கி.மீ., நீளத்துக்கு, 120 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதேபோல், ஐந்து ஆண்டுகளில், இணைப்பு இல்லாத பகுதிகளில் மழைநீர் வடிகால் இணைப்பிற்காக, 350 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது

* வடகிழக்கு பருவமழைக்கு முன், மழைநீர் வடிகால்கள் துார்வார, ஐந்தாண்டுகளில் 115 கோடி ரூபாயை மாநகராட்சி செலவு செய்துள்ளது

* சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், 1,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூவம், அடையாறு ஆறுகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், 700 கோடி ரூபாய்க்கான பணிகள் முடிந்துள்ளன

*சென்னையில் 7,351 மழை நீர் வடிகால்கள், 1,894 கி.மீ., நீளத்துக்கு உள்ளன. சென்னை மொத்த சாலையான 33 ஆயிரத்து 845 சாலைகளில் 5,912 சாலைகள் என 32 சதவீதம் மட்டுமே மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன

* சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் 2,500 உறை கிணறுகள், 25 ஆயிரம் நீர் உறிஞ்சும் குழாய்கள் அமைக்கப்பட்டு, மழைநீர் வடிகால்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2015ம் ஆண்டு வெள்ள பாதிப்புக்கு பின், சென்னை மாநகராட்சி, மழைநீர் வடிகால், நீர்நிலை சீரமைப்புக்கு மட்டுமே, 2,400 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. அதேபோல, பொதுப்பணித் துறையும் 700 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

இவ்வளவு பெரிய தொகை செலவிட்டு, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அக்., 25ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 20.71 செ.மீ., அளவில் பெய்த மழைக்கே, மாநகர் முழுதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்றால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாய் செலவில், தி.நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் தனியாக கட்டப்பட்டது. மேலும், மாம்பலம் கால்வாய், 80 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.

அப்படி இருந்தும், மாம்பலம் சுற்றுவட்டார பகுதிகள், மற்ற பகுதிகளை விட அதிகளவில் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளன. இதற்கு, அகலமான அளவில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படாததும், திடக்கழிவு மேலாண்மையை முறையாக பின்பற்றாததும், மழைநீர் வடிகால்களுக்கு இணைப்பு வழங்காததும், பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பாடததும் தான், முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்கள், 3 முதல் 4 அடி உயரம் என்ற, அளவில் தான் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 6.8 செ.மீ., அளவில் தான் தண்ணீரை உள்வாங்கும் திறன் உள்ளது.

அதற்கு அதிகமான அளவில் மழை பெய்தால், வடிகால்களில் இருந்து, ஆறுகளில் மழை நீர் சென்று கடலில் கலக்கும் வரை தேக்கம் அடைகிறது.இதை தவிர, ஒவ்வொரு ஆண்டும் துார் வாரப்பட்டாலும், திடக்கழிவு மேலாண்மையை சரியாக கையாளாததால், பல்வேறு வடிகால்கள், நீர்நிலைகளில், குப்பை, பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் அடைத்து, நீர் செல்ல முடியாமல் தடுத்து விட்டன. எனவே, பொது இடங்களில் குப்பை தொட்டிகளுக்கு பதிலாக, அறிவியல் ரீதியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திடக்கழிவு மேலாண்மையை கையாள வேண்டும். அப்போது தான், நீர் தேங்காமல் செல்ல வழி கிடைக்கும்.

மேலும், சென்னையில் மக்களை காக்கும் பொறுப்பு, மாநகராட்சி மற்றும் காவல் துறையிடம் மட்டுமே இருப்பது போல தோற்றம் உருவாகி உள்ளது. ஆனால், நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை, ரயில்வே நிர்வாகம், மெட்ரோ ரயில்வே போன்ற பல்வேறு துறைகளும், மழைநீர் வடிகால்கள், நீர்நிலைகளை பராமரித்து வருகின்றன. அவற்றை ஒவ்வொரு முறையும் சீரமைக்க, சென்னை மாநகராட்சி வலியுறுத்தினால் மட்டுமே, அப்பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்படுகின்றன.இவற்றை தவிர்த்து, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, ஒரு குழுவை அமைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் மட்டுமே, வரும் காலங்களிலாவது வெள்ள பாதிப்பை தடுக்க முடியும்.


களிமண் பகுதி


இதுகுறித்து, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை மாநகர் சமதள பரப்புடன், கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் மட்டுமே உள்ளது.களிமண் நிறைந்த பகுதியாக சென்னை இருப்பதால், 5 அடிக்கு மழைநீர் தேங்கினாலே, மாநகர் மூழ்கும் அபாயம் உள்ளது.

இங்கு, கூவம், அடையாறு, பகிங்ஹாம் போன்ற பிரதான கால்வாய்களுடன், 52 கிளை கால்வாய்களும் உள்ளன. இவற்றில் கூவம், அடையாறு ஆற்றில் இருந்த பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் அகற்றவேண்டியுள்ளது. இதை தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 912 ஏரிகளில், 908 ஏரிகளில் இருந்து பல்வேறு இணைப்பு கால்வாய்கள் வாயிலாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உள்ளது.வெள்ளத்தில் மிதக்கிறது

மேலும், 170 ஏரிகளில் இருந்து, நேரடியாக கூவம், அடையாறு ஆறுகளுக்கு நீர் வரத்து உள்ளது. 65 ஏரிகளில் இருந்து, கோவளம் வடிநில பகுதிக்கு மழைநீர் வருவதால், சோழிங்கநல்லுார், பெருங்குடி பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.சென்னையில் 1 டி.எம்.சி., நீரை சேமிக்க, 3.6 கி.மீ., நீளமும், 2.5 மீட்டர் ஆழமும் தேவைப்படுகிறது.சென்னை போன்ற நகர பகுதிகளில் இதற்கு வாய்ப்பில்லை. இதனால், 5 அடிக்கு தண்ணீர் தேங்கினாலே, மாநகர் வெள்ளத்தில் மிதக்கிறது.முக்கிய நீர் வழித்தடங்களில், 20 முதல் 35 அடி உயரம் வரை தடுப்பணைகள் கட்ட முடியாது.

அப்படி கட்டினால் நீர் தேக்கும்போதும், திறந்து விடும் போதும், சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்படும்.மேலும், செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் ஏரிகளின் பரப்பளவை அதிகரிக்க நினைத்தால், அதை சுற்றியுள்ள 1,000 கிராமங்கள் பாதிக்கப்படும். இதனால், மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்றவை வாயிலாக மட்டுமே நீரை சேமிக்க முடிகிறது.மழைநீர் வடிகால்கள் மற்றும் அனைத்து நீர்நிலைகளும் சீரமைக்கப்பட்டால் மட்டுமே, அதிகளவில் மழை பெய்யும் போதும் வெள்ள பாதிப்பை சமாளிக்க முடியும்.

சென்னையில் மழைநீர் கட்டமைப்புக்கு, மத்திய அரசு 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது போன்ற தகவல், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.மத்திய அரசு, 2008ம் ஆண்டில் தான், மழைநீர் கட்டமைப்புக்கு 500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. அதன்பின், மத்திய அரசு நிதி வழங்கவில்லை. உலக வங்கி, ஆசிய வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவி மற்றும் தமிழக அரசு நிதி உதவி, மாநகராட்சி நிதி வாயிலாக மட்டுமே அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
வீடுகளில் மழை வெள்ளம்; எப்போது தீரும் இந்த அவலம்?


ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கன மழை, சென்னையை மிதக்க விட்டுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் மூழ்கி விட்டன. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மை நிபுணர் பிரபு காந்தி கூறியதாவது: மழை நீர் தேக்கம் ஏற்பட்டதற்கு காரணமாக, மூன்று விஷயங்களை கூறலாம்.

*அக்., மாதத்தில் இருந்து, இந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கின. அந்த பணிகள் வேகமாக நடப்பதால், பல இடங்களில் மழை நீர் வடிகால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு, இந்தப் பணிகளுக்காக, பல இடங்களில் பள்ளம் தோண்டும் பணி நடந்திருக்கிறது. அதனால், அந்த பள்ளங்களில் தண்ணீர் தேக்கம் இருக்கிறது. அந்த பள்ளங்களுக்கும், மழை நீர் வடிகால் கால்வாய்க்கும் சரியான இணைப்பு இல்லாததால், மழை நீர் தேக்கத்தை தவிர்க்க முடியவில்லை

* சென்னையை பொறுத்தவரை, மழை நீர் வடிகால்வாய் என்பது, போதுமான கட்டமைப்பில் இல்லை. அதாவது, பேரிடரை தாங்கக் கூடிய கட்டமைப்பு இல்லை. 15 செ.மீ., மழையை மட்டுமே தாங்கக் கூடிய அளவில் கட்டமைப்புகள் உள்ளன. இந்த ஆண்டு 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்துள்ளது. இந்த கட்டமைப்பு உடனடியாக மழை நீரை வடித்துக் கொள்ளும் அளவுக்கு இல்லை. 2015 ஆண்டின் போதும் இதே தான் நடந்தது

* மழை நீர் வடிகால்வாய்களை பருவ மழை காலத்துக்கு முன் துார் வாருவது நடக்கும். இந்த ஆண்டும் அது நடந்தது. ஆனால், அந்த பணிகள் முழுமையாக நடக்கவில்லை என தகவல். மழை நீர் வடிகால் கால்வாயை துார் வாரியதும், கால்வாயில் இருந்து எடுக்கப்படும் மண் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை, உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஆனால், அருகிலேயே அதை சேமித்து வைத்து விட்டனர். மழை வேகமாக பெய்ததும், தேக்கி வைக்கப்பட்ட மண்ணும், பிளாஸ்டிக் பொருட்களும் மீண்டும் மழை நீர் வடிகால் கால்வாய்க்குள் செல்ல, தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு அடைப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு வீட்டில் இருந்தும், மழை நீர் வெளியேற சரியான பாதை அமைக்கப்பட வேண்டும். அப்படி செய்யாத, எந்த கட்டடத்துக்கும் அரசு அனுமதி கிடையாது என அறிவிக்க வேண்டும். அதேபோல, எதிர்கால நலன் கருதி, குறிப்பிட்ட அளவுக்கு கட்டடத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
09-நவ-202118:29:48 IST Report Abuse
தியாகு அவ்வளவு பணமும் கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுக அல்லக்கைகளின் வீட்டு சொத்தா மாறியிருக்கும். பிறகு எப்படி மழை நீர் வடியும்?
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
09-நவ-202118:00:53 IST Report Abuse
P.K.SELVARAJ அடையாறு மற்றும் கூவம் ஆற்றை ஒவ்வொரு வருடமும் தூர் வார வேண்டும். குறைந்த பட்சம் 2015 ஆண்டுக்கு பிறகு இதனை செய்திருக்க வேண்டும். இந்த ஆட்சியும் இந்த வருடம் கொரானா காரணமாக இதை செய்யவில்லை என கூறலாம். இனி வரும் நாட்களில் இதனை செய்யவில்லை என்றால் அதோ கதி தான். வடிகால் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டி இருந்தால் யார் பொறுப்பு. மக்கள் தலை எழுத்து.
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
09-நவ-202116:49:41 IST Report Abuse
Rajarajan பல வருடங்களுக்கு முன்பு, தமிழக அரசிற்கு ஒரு திட்டம் கொடுத்தேன். எந்தெந்த அரசு துறைகளை எந்த மாவட்டத்திற்கு மாற்றவேண்டும், தனியார் தொழிற்பூங்கா எந்த எந்த மாவட்டத்தில், எந்த பொருட்களுக்காக அமைக்கவேண்டும் என்று. மேலும், எந்த துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை எந்த தொழிற்பூங்காக்களுடன் இணைக்கவேண்டும் என்பன போன்றவை. அந்தோ பரிதாபம் அது குப்பைத்தொட்டிக்கு போனது தான் மிச்சம். (அது என்னமோ தெரியவில்லை, வெள்ளை சட்டை அணிந்தால் போதும், தனியார் தொலைக்காட்சிகளில் வெட்டியாக பேச வைக்கிறார்கள். விஷயம் உள்ளவர்களை / உருப்படியான திட்டம் கொடுப்பவர்களை அழைப்பதே இல்லை).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X