உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து கடத்தியதற்காக, பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்து கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்றம், ஆர்யன் கானை ஜாமீனில் விடுதலை செய்ய மறுத்து விட்டது. ஆனால் மும்பை உயர் நீதிமன்றம், ஜாமீனில் எப்படி விடுதலை செய்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. அரபு நாடுகளில், போதை மருந்து வைத்திருந்தாலே, விசாரணையின்றியே துாக்கில் தொங்க விடப்படுவர்.

ஆனால், நம் நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், கடத்தல் போன்ற, 'கிரிமினல்' செயல்கள் மட்டுமல்லாது, குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத செயலிலும் தாராளமாக
ஈடுபடலாம். ஏனெனில், நம் நாட்டு சட்டங்கள் அவ்வளவு ஓட்டைகள் நிறைந்தவை.
'முன் ஜாமின், வாய்தா, அப்பீல்' என, ஏராளமான வாய்ப்புகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் சுலபமாக வெளியே வந்து விடுகின்றனர். இவை தவிர அரசியல், செல்வாக்கு, பண பலம் ஆகியவையும், கிரிமினல்கள் விடுதலையாக உதவுகின்றன. இதையும் மீறி சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தாலும், அவர்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் பணம் இருந்தால், சிறை என்பது சொகுசு விடுதி தான். கஞ்சா முதல் விரும்பியது எல்லாம் கிடைத்து விடும்.
போதை மருந்து கடத்தலில் சம்பந்தப்பட்டு உள்ள ஆர்யன் கான், எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிக இயல்பாக இருக்கிறார். அவர் ஏதோ தியாகச் செயல் புரிந்து, சிறை சென்று வருவது போல், ஷாரூக் கான் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி இருக்கின்றனர். இந்த அசிங்கத்தை எல்லாம், இந்தியாவை தவிர வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாது!
ஆர்யன் கான் உடன் மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரையும், மும்பை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது. இவர்களின் பின்னால், சர்வதேச கடத்தல்காரர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியாது. போதை மருந்து கடத்தல் கும்பலை, இனி சட்டம் நெருங்கவே நெருங்காது.
ஆர்யன் கான் விடுதலையோடு, இந்த விஷயம் முடிவுக்கு வந்து விடும்; இதைப் பற்றிய செய்திகள் இனி வெளிவராது. இது தான் நம் தேசத்தின் நிலைமை. சட்டங்கள் கடுமையாகாத வரை, நீதி துறையில் அரசியல் தலையீட்டை நிறுத்தாத வரை, நம் நாட்டில் குற்றங்கள் பெருகுவதை தடுத்து நிறுத்தவே முடியாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE