கூடலுார் : பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு வீணாக வெளியேறும்தண்ணீரை தடுக்க, தமிழகப் பகுதியில் மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து கூடுதல் தண்ணீரை தமிழகப்பகுதிக்கு எடுத்து அதனை தேக்கி வைப்பதற்கு 2 அணைகள்கட்டினால், தென்தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் விவசாயம், குடிநீர் தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என ஓய்வு பெற்ற பொறியாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பெரியாறு அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஏக்கர் பரப்பளவில் இரு போக விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகி வந்தது. 1979ல் அணை பலமிழந்து உள்ளதாக கேரள தரப்பில் புகார் கூறியதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. இதனால் தேனி மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஒரு போக விவசாயம் கூட முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு பெரியாற்று தண்ணீர் தொடக்கூட முடியாமல் போனது. இதனால், விவசாயம், குடிநீர் பிரச்னை அதிகமானது.பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையைப் பலப்படுத்தியபின், முழுக்கொள்ளளவான 152 அடி நீர் தேக்கிக் கொள்ளலாம் என 2014 மே 7 ல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதன்பின் 2014 நவ. 20. 2015 டிச. 7,. 2018 ஆக. 16 ஆகிய நாட்களில் 142 அடியாக அணை நீர்மட்டம் உயர்ந்தது.
அப்போது 142 அடிக்கு மேல் வரும் தண்ணீர் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர் வழியாக கேரள பகுதிக்கு வீணாக தண்ணீர் திறக்கப்பட்டது.வீணான 3 டி.எம்.சி., தண்ணீர்2018 ஆக., 16 ல் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியைத் தாண்டியது. இதனால், அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர் வழியாக கேரள பகுதிக்கு வீணாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆக. 16 ல் இருந்து 20 ம் தேதி வரையுள்ள 5 நாட்களில் கேரள பகுதிக்கு 2.40 டி.எம்.சி., தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது.
தற்போது நீர்த்தேக்க அளவு கால அட்டவனை (ரூல் கர்வ்) என்ற முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கூடுதல் மழை பெய்யும் நேரத்தில் 142 அடி நீர்மட்டம் உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த கன மழையால் நீர்மட்டம் 142 அடியை எட்டிவிடும் நிலையில் அக். 29 ல் நீர்மட்டம் 138.85 அடியாக இருந்தபோதே கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அக். 29ல் இருந்து நவ. 6 வரை கேரள பகுதிக்கு வீணாக தண்ணீர் வெளியேறியது. இதன் மூலம் 2014க்குப்பின் கேரள பகுதிக்கு மொத்தம் 3 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறி வீணாக அரபிக்கடலில் கலந்துள்ளது.
தமிழகப்பகுதிக்கு 2500 கன அடிதமிழகப்பகுதிக்கு தேக்கடி ஷட்டரில் இருந்து சுரங்கப்பாதை வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2500 கன அடி நீர்மட்டுமே திறக்க முடியும். இந்த தண்ணீர் லோயர்கேம்ப் மின் உற்பத்திக்கு 4 ராட்சத குழாய் வழியாகவும், இறைச்சல் பாலம் வழியாகவும் வெளியேறும். இதைவிட கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.
மேலும் ஒரு சுரங்கப்பாதை
தமிழகப்பகுதிக்கு மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து, இதை விட அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டால் வீணாக கேரள பகுதிக்கு தண்ணீர் வெளியேற வேண்டிய அவசியமில்லை. மேலும், அணையின் நீர்மட்டம் தொடர்பாக கேரளாவிடம் அடிக்கடி பிரச்னை செய்ய வேண்டியதும் வராது என தமிழக ஓய்வு பெற்ற பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது சுரங்க பாதை
எஸ். சுதந்திர அமல்ராஜ், ஓய்வு செயற்பொறியாளர், பெரியாறு அணை: 1958ல் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம் துவங்கும் போது, தமிழகப்பகுதிக்கு தண்ணீர் வெளியேறும் சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டது. அதன்மூலம் அதிகபட்சமாக வினாடிக்கு 2500 கன அடி நீர் மட்டுமே வெளியேற்ற முடியும். 2014ல் மே 7ல் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், தமிழகப்பகுதிக்கு மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க இரண்டாவது சுரங்கப்பாதை அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால் ஒரு ஆண்டில் இப்பணியை முடித்து கூடுதல் தண்ணீரை தமிழகத்திற்கு எடுத்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இது தவிர மற்றொரு திட்டமான பெரியாறுஅணை நீர்வரத்து பகுதியான முல்லைக்கொடியில் இருந்து மங்கலதேவி கண்ணகி கோயில் மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து லோயர்கேம்ப் பளியன்குடி வழியாக தண்ணீர் வெளியேறும் வகையில் ஒரு திட்டத்தை ஏற்படுத்தலாம்.
இத்திட்டத்தில் மூலம் கூடுதல் தண்ணீர் தமிழகப்பகுதிக்கு எடுப்பதுடன்,தேக்கடியில் படகு சவாரிக்கு பாதிப்பு ஏற்படாமல் அணையில் 104 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டும் தமிழகப்பகுதிக்கு திறந்து விடப்படலாம். இவ்வாறு செய்வதன்மூலம் லோயர்கேம்பில்இருந்து ராமநாதபுரம்வரை 250 கி.மீ., துாரத்திற்கு விவசாயம், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது.
இரு அணைகள் கட்டி சேமிக்கலாம்
பி. ஆர். சுந்தரராஜன், ஓய்வு பெற்ற பெரியாறு அணை கண்காணிப்பாளர்:தமிழகப்பகுதிக்கு இரண்டாவது சுரங்கப்பாதை அமைத்து மேலும் கூடுதல் தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை எடுத்தால், அணையில் இருந்து 142 அடிக்கு மேல் வீணாக கேரள பகுதிக்கு வெளியேறும் தண்ணீரை தமிழகம் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். அணையில் இருந்து கேரளாவுக்கு வெளியேறும் தண்ணீர் இடுக்கி அணையைச் சென்றவுடன் அதற்குப்பின் அரபிக்கடலில் வீணாக கலக்கிறது.
பெரியாறு அணை நீரால் கேரளாவிற்கு எவ்வித பயனும் இல்லை. 2014 க்கு மேல் 3 முறை வீணாக கேரளாவுக்கு சென்ற தண்ணீர் தமிழகப்பகுதிக்கு வந்திருந்தால் இரு போக விவசாயம் முழுமையாக செய்திருக்க முடியும். மேலும் தேனி மாவட்டத்தில் மேலும் 2 அணைகள் கட்டி தண்ணீரை சேமிப்பதற்கான முயற்சியும் தமிழக அரசு செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE