மதுரை : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க தாக்கலான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது.
துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அரசியல் சாசனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் பட்டியலான 8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது.
இது அட்டவணையில் உள்ள 20 மொழிகளை தாய்மொழியாக கொண்ட 85 கோடி பேருக்கு எதிராக உள்ளது.தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அப்பள்ளிகள் அமைந்துள்ள மாநிலத்தில் அலுவல் அல்லது தாய்மொழியாக எது உள்ளதோ அம்மொழியை ஹிந்தி, சமஸ்கிருதத்திற்கு மாற்றாக கட்டாய படமாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு செல்வகுமார் குறிப்பிட்டார்.நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது.மத்திய அரசுத் தரப்பு: கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் விருப்பப் பாடமாக உள்ளது என தெரிவித்தது.நீதிபதிகள்: கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் பாடம் உள்ளது. ஆனால் அங்கு தமிழ்வழி கல்வி தேவை என உரிமை கோர முடியாது. தமிழ்வழியில் படிக்க விரும்பினால் அப்பள்ளிகளுக்கு ஏன் செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பி, தீர்ப்பை ஒத்திவைத்தனர்.