ஸ்ரீபெரும்புதுார்--கூரை சேதமானதால், ஸ்ரீபெரும்புதுார் நுாலகத்தின் உள்ளே மழை நீர் செல்வதால், வாசகர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார், காந்தி சாலையில், வட்டார முழு நேர கிளை நுாலகம் உள்ளது. இங்கு 60 ஆயிரம் புத்தகங்கள், 5,000 உறுப்பினர்கள், 60 புரவலர்கள் உள்ளனர். நாளொன்றுக்கு, 250 பேர் இந்த நுாலகத்திற்கு சென்று நாளிதழ் மற்றும் புத்தகங்களை படிக்கின்றனர்.இந்நிலையில், இந்த நுாலக கட்டடம் விரிசல் விட்டு பலவீனமாக உள்ளது. மழை காலம் துவங்கியுள்ளதால், விரிசல் வழியே நுாலகத்தின் உள்ளே தண்ணீர் கசிகிறது. கூரையில் உள்ள சிமென்ட் உதிர்ந்து விழுவதால், வாசகர்கள் அச்சமடைகின்றனர்.வாசகர்கள் கூறியதாவது:நுாலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது இடைவிடாமல் தொடர் மழை பெய்வதால், விரிசல் வழியே நுால கத்தின் உள்ளே மழை நீர் கொட்டுகிறது.இதனால், நுாலகம் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. இதனால், நுாலகத்தின் உள்ளே செல்வதற்கே அச்சமாக உள்ளது. நுாலகத்தை புதுப்பித்து கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.காஞ்சிபுரம் மாவட்ட நுாலக அலுவலர் ஒருவர் கூறுகையில், ''ஸ்ரீபெரும்புதுாரில் பழுதடைந்த நுாலக கட்டடத்தை இடித்து, அதே இடத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நுாலகம் கட்ட அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி உள்ளோம். ''பாதுகாப்பு கருதி, விரைவில் நுாலகத்தை வாடகை கட்டடத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.