லக்னோ : ''ராமர் தசரத மகாராஜாவின் மகன் அல்ல. அவர் நிஷாத் சமூகத்தில் பிறந்தவர்,'' என, உத்தர பிரதேசத்தில் பா.ஜ., கூட்டணியில் உள்ள நிஷாத் கட்சி தலைவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிஷாத் கட்சி தலைவர் சஞ்சய் நிஷாத் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ''கடவுள் ராமர், நிஷாத் சமூகத்தில் பிறந்தவர். அவர் தசரத மகாராஜாவின் மகன் அல்ல,'' என்றார். இந்த கருத்து பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து உ.பி., - காங்., பிரமுகர் அன்ஷு அவாஸ்தி கூறியதாவது: அலகாபாத்தில் நிஷாத் சமூகத்தினரின் படகுகள் சேதப்படுத்தப்பட்ட போது அமைதியாக இருந்த சஞ்சய் நிஷாத், இப்போது ராமர் குறித்து பேசுகிறார்.தன் சொந்த சமூக மக்கள் சந்தித்து வரும் உண்மையான பிரச்னையை திசை திருப்ப, பா.ஜ., வகுத்துக் கொடுத்த திட்டப்படி அவர் செயல்படுகிறார். ராமர் குறித்து கருத்து தெரிவிக்க சனாதன ஹிந்து தர்ம துறவியருக்கு மட்டுமே உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதின் ஓவைசி கூறுகையில், ''இந்த விவகாரம் குறித்து பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் தான் கருத்து கூற வேண்டும். ''சஞ்சய் நிஷாத் தெரிவித்த கருத்தை மரபியல் நிபுணரான ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்றார்.
கிழக்கு உத்தர பிரதேசம் மற்றும் பீஹாரில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் நிஷாத் சமூக மக்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த சமூக மக்களுக்காக துவங்கப்பட்ட நிஷாத் கட்சி, 2017 சட்டசபை தேர்தலில் 72 தொகுதிகளில் போட்டியிட்டு, 5.40 லட்சம் ஓட்டுக்களை பெற்று ஒரு தொகுதியை கைப்பற்றியது. அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் நிஷாத் கட்சியுடன் பா.ஜ., கூட்டணி அமைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE