சென்னை: ‛‛கடந்த 2015 ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?'' என்று சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னையில் தொடர்ச்சியாக 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. 2015க்குப் பிறகு கடும் மழை வெள்ளத்தை சென்னை மாநகரம் சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த 2015ல் செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்துவிட்டதன் விளைவாக சென்னையில் வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டது. இதுவரை சென்னை சந்தித்திராத அவலத்தை அந்த வெள்ளம் கொண்டுவந்து சேர்த்தது. இதனால் அரசும், நிர்வாகமும் பாடம் கற்றுக்கொண்ட நிலையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மராமத்துப் பணிகளை பெருநகர நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.
ஆனால், அதன்பிறகு 7 ஆண்டுகள் ஆனநிலையில் இதுவரை சந்தித்திராத அளவுக்கு கடந்த மூன்று நாட்களாக வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னைப் பெருநகர மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அரியலுார் மாவட்டம் பெரிய திருக்கோணத்தில் மாமனக்கா ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி தெரிவித்ததாவது:
கடந்த 2015ம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டநடவடிக்கை என்ன? சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? மீண்டும் சென்னையை தத்தளிக்க விட்டுவிட்டார்களே. மழைநீர் தேங்காமல் தடுக்க என்னதான் செய்துகொண்டிருந்தார்கள்.
மக்கள் பாதிநாள் தண்ணீரிலும், பாதிநாள் தண்ணீருக்காவும் தவிக்கின்றனர். சென்னை உட்பட அனைத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய மழை, வெள்ளம் அதிகாரிகளுக்கு பாடத்தை கற்பித்துள்ளது.
ஒரு வாரத்தில் நிலைமை சீராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை தொடுக்கும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE