அந்த நாள் ஞாபகம் வந்ததே!
'இவருக்கு இந்த பதவி எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். பரவாயில்லை; தாமதாக கிடைத்தாலும், வேலையில் கலக்குகிறார்' என, வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மீனாட்சி லேகியைப் பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.இவர், டில்லியைச் சேர்ந்தவர். சட்டம் படித்தவர். மிகச் சிறந்த பேச்சாளர். மோடி, முதல் முறையாக பிரதமராக பதவியேற்றபோதே மீனாட்சி லேகிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என அனைவரும் நினைத்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. இரண்டாவது முறையாக மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தபோதும் மீனாட்சிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. ஆனால் ஜூலையில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது, மீனாட்சிக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதவி தரப்
பட்டது. கொரோனா பரவல் காரணமாக துவக்கத்தில் அடக்கி வாசித்த அவர், இப்போது வேலையில் சுறுசுறுப்பாக இயங்கத் துவங்கி விட்டார்; கோப்புகள் வேகமாக நகருகின்றன. சமீபத்தில் சுவிட்சர்லாந்து, செர்பியா, கொலம்பியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்களுடனும் சகஜமாக பழகுகிறார். 'மீனாட்சி லேகியின் செயல்பாடுகளை பார்க்கும்போது, ஏற்கனவே வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் ஞாபகம் வருகிறது. அவரும் எங்களுடன் உரிமையுடன் பழகுவார்' என, உணர்ச்சிவசப்படுகின்றனர், ஊழியர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE