கல்லா கட்டலாம் கடைசி வரையில்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'கல்லா' கட்டலாம் கடைசி வரையில்!

Added : நவ 09, 2021 | கருத்துகள் (1)
Share
'கல்லா' கட்டலாம் கடைசி வரையில்!வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் அரசியல்வாதிகள், தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காலத்தில் தான் ஊழல் செய்து சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர். ஆனால், இந்த அரசு அதிகாரிகளோ, தாங்கள் பணி ஓய்வு அடையும் வரையில், சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர்; இதில்


'கல்லா' கட்டலாம் கடைசி வரையில்!வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் அரசியல்வாதிகள், தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காலத்தில் தான் ஊழல் செய்து சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர். ஆனால், இந்த அரசு அதிகாரிகளோ, தாங்கள் பணி ஓய்வு அடையும் வரையில், சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர்; இதில் ஆண், பெண் பேதம் இல்லை!
வேலுார், பொதுப் பணித் துறை பெண் செயற்பொறியாளர் ஷோபனா வீட்டில் இருந்து, 2.28 கோடி ரூபாய் ரொக்கமாகவும், தங்கம், வெள்ளி நகைகள், 'பினாமி' பெயரில் சொத்து என ஏகப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.பொதுப் பணித் துறையில், ஊழல் இரண்டறக் கலந்து விட்டது. காவல் நிலையத்தில் எந்தெந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் வாங்கப்படுகிறது என்பதை சமீபத்தில் அறிந்தோம்.வணிக வரி, தொழிலாளர் நலம், உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்து போன்ற துறைகளில் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது.ஆட்சி மாறினாலும், இந்த ஊழல் அரசு அதிகாரிகள் மட்டும் 60 வயது வரை மாறுவதே இல்லை.ஊழல் அதிகாரிகள் பணி நிறைவு பெறும் கடைசி நாளில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு வந்ததை, தற்போது தமிழக அரசு நிறுத்தி விட்டதால், ஷோபனா போன்றோர் கடைசி வரையில், 'கல்லா' கட்டலாம்.
ஜனாதிபதியாக இருந்து பணி நிறைவு பெற்ற போது, புத்தகங்கள் மற்றும் தன் உடைகளுடன் மட்டும் வெளியேறிய அப்துல் கலாம் பிறந்த தமிழகத்தில் தான், ஷோபனா போன்ற, 'ஊழல் பெருச்சாளி'களும் உள்ளனர்.பள்ளி மாணவி ஒருவர், 'ஊழல் எப்போது ஒழியும்?' என, அப்துல் கலாமிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், 'உங்கள் பெற்றோர் எடுத்து வரும் ஊழல் பணத்தை தொட மாட்டோம்; அதன் மூலம் கிடைக்கும் ஆடம்பர பொருள்களை பயன்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எப்போது உறுதி எடுக்கின்றீரோ, அன்று தான் ஊழல் ஒழியும்' என பதில் அளித்தார்.ஒழுக்கமான குழந்தைகளை உருவாக்க, நம் கல்வி முறை தவறி விட்டது. அதனால் தான், அரசு அதிகாரிகளிடம் ஊழல் தலைவிரித்தாடுகிறது.ஷோபனா போன்ற, 'கருப்பு ஆடுகள்' தண்டிக்கப்படுவதுடன், அவருக்கு உறுதுணையாக இருந்த குடும்ப உறவுகளும், சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.


தமிழ்நாடும் இரு ரகசியங்களும்!நாங்கூர் ஈஸ்வரன், கோவையிலிருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: 'தமிழ்நாடு' பெயர் சூட்டல் விஷயத்தில் இரு ரகசியங்கள் உள்ளன...கடந்த 1967ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், நிர்வாக ரீதியாக சென்னை மாகாணத்திற்கு, 'தமிழ்நாடு' என பெயர் சூட்டப்பட்டது.மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபோது சென்னை மாகாணத்துக்கு, 'தமிழ்நாடு' என பெயர் சூட்ட வேண்டும் என, முதன் முதலில் காமராஜர் தான் யோசனை கூறினார்.
ஆனால், 'ஆந்திர மக்கள், சென்னைக்கு உரிமை கோருவதால், தற்போது நம் மாநிலம் சென்னை மாகாணம் என்றே இருக்கட்டும்; அப்போது தான், சென்னை நமக்கு கிடைக்கும்' என காமராஜரிடம், ராஜாஜி ஆலோசனை கூறினார். இத்தகவல் 1967ல், 'ஸ்வராஜ்யா' இதழில் உள்ளது.சாதனைகளை விளம்பரம் செய்யும் சாணக்கியத்தனம் காங்கிரசிடம் இல்லாததால், அக்கட்சியினர் கூட இந்த விஷயத்தை அறியார்; இது முதல் ரகசியம்!
கடந்த 12ம் நுாற்றாண்டிலேயே தொண்டை நாடு, நடு நாடு, கொங்கு நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என வடக்கில் துவங்கி, தெற்கின் விளிம்பு வரை ஆறு நாடுகளையும் பூகோள ரீதியாக இணைத்து முதன் முதலில், 'தமிழ்நாடு' என குறிப்பிட்டவர் சேக்கிழார்.பெரிய புராணத்தில் உள்ள, 'திருஞானசம்பந்தர் புராணம்' பகுதியில், 2,550வது பாடலின் முதல் வரியில், 'பானல் வயல் தமிழ்நாடு' எனக் குறிப்பிடுகிறார்; அதாவது, குவளை மலர் நிறைந்த வயல்கள் நிரம்பிய தமிழ்நாடு என்று அர்த்தம்.
பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, 'தமிழ்நாடு' என்பது நம் இலக்கியத்தில் இருந்தது. திராவிட அரசியல்வாதிகள் ஒன்றும் புதியதாக அதை கண்டுபிடிக்கவில்லை. இது இரண்டாவது ரகசியம்!வைகாசி பூசம் சேக்கிழார் திருநட்சத்திர நாளை, 'தமிழ்நாடு நாள்' எனலாம். இது, தமிழின் பழமையை உலகிற்கு காட்டும். அகத்தியர், தமிழை படைத்தார். தொல்காப்பியமும், நன்னுாலும் கூடுதலாக இலக்கணம் உரைத்தன. பதினெண் கீழ்க்கணக்கு, மேல் கணக்கு, ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறு காப்பியம், இன்னபிற பழந்தமிழ் நுால்களால் சிறப்புற்றது தமிழ்.
திராவிட அரசியல்வாதிகள், தமிழை தங்கள் வயிறு வளர்க்கும் அரசியலுக்கு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.'தமிழ், தமிழ்நாடு' என்போர் நிறைய வரலாறும், இலக்கியமும் அறிய வேண்டும்.


ஹிந்துக்களுக்கு யார் முதல்வர்?கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்; போப் கூட தீபாவளியை போற்றுகிறார்.
இஸ்லாமிய நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவும் இந்தியருக்கு தீபாவளி வாழ்த்து அளிக்கின்றன.ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டும் ஹிந்து மீது அவ்வளவு வெறுப்பு, வன்மம், கோபம் இருக்கிறது. அதனால் அவர், ஹிந்து பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை.ஸ்டாலின், மதசார்பற்ற அரசின் முதல்வராக செயல்படவில்லை. கிறிஸ்துவம், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமான முதல்வராக இருக்கிறார்.இந்த ஹிந்து வெறுப்பாளருக்கு, நாம் ஏன் ஓட்டு அளித்தோம்?இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ளோர், ஹிந்துகள் தான். ஆனால் ஸ்டாலின், அவர்களுக்கு முதல்வராக நடந்து கொள்ளவில்லை.
அவர் ஜாதி, மதங்களின் மேல் வெறுப்பு உடையவர் என்றால், ஏற்று கொள்ள முடியும். 'நாத்திகவாதி' என்றாலும் சரி தான். ஆனால் அவருக்கு, ஹிந்து என்றால் மட்டுமே கசக்கிறது.கிறிஸ்துவ, முஸ்லிம் மதங்கள் பிடித்திருக்கிறது.அனைத்து மதத்தினருக்கும் சமமானவரே, தலைமைக்கு தகுதியானவர். ஸ்டாலின், ஒருதலை பட்சமாக செயல்படுகிறவர்.மதச்சார்பற்ற தலைமைக்கு ஆதரவளிக்கலாம்; ஹிந்து விரோதிக்கு ஏன் ஆதரவளிக்க
வேண்டும்?கடந்த முறை தவறி விட்டோம்; அடுத்த முறையாவது திருந்துவோம்!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X