மேட்டுப்பாளையம்: மூலத்துறையில் உள்ள பழமையான ரங்காநாதர் கோவில் கோபுரத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகள் ஆச்சரியம் தரும் விதத்தில் இடம் பெற்றுள்ளது.சிறுமுகை அடுத்த மூலத்துறையில், விநாயகர், சிவன், அம்மன் என, 30க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.வழக்கமாக, கோவில் கோபுரங்களில் தெய்வங்களின் சிலைகள் இடம் பெறும். ஆனால், இங்குள்ள பழமையான ரங்கநாதர் கோவில் கோபுரத்தில், சுவாமி சிலைகளுக்கு பதிலாக, சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகள் இடம்பெற்றுள்ளது ஆச்சரியம் தருகிறது. இதன்வாயிலாக, நாட்டுப்பற்று மிக்கவர்களும், சுதந்திர தாகத்துக்கு போராடியவர்களும் இப்பகுதியில் எவ்வாறு போற்றப்பட்டுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. இக்கோவில் சிலைகள் சிதிலமடைந்து, காணப்படுவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். திருப்பணிகள் மேற்கொண்டு, அடுத்த தலைமுறைக்கு கோவில் மகத்துவத்தை எடுத்துசெல்ல வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.
மூலத்துறையை சேர்ந்த முதியவர் சண்முகம், அர்ச்சகர் கண்ணன் கூறியதாவது:மூலத்துறையில் விநாயகர் கோவில்கள், மாரியம்மன், ரங்கநாதர், மாகாளியம்மன், சங்கமேஸ்வரர் உட்பட, 30க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில், விநாயகர், மாகாளியம்மன் ஆகியன மட்டுமே பொது கோவில்கள்.மீதமுள்ள அனைத்தும், பல்வேறு சமூகத்தினரின் குலதெய்வங்களின் கோவில்களாக உள்ளன. கோவில் கோபுரங்களில், சுவாமிகள் சிலைகள் தான் இருக்கும். ஆனால், எங்கள் கிராமத்தில், பழமையான ரங்கநாதர் கோவில் கோபுரத்தில் காந்தி, நேரு, சுபாஷ்சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரின் சிலைகள் நான்கு புறமும் இடம்பெற்றுள்ளன. நால்வரையும் போற்றி வணங்கிவருகிறோம். இந்த கோவில் கோபுரமும், அதில் உள்ள சிலைகளும் சிதிலம் அடைந்துள்ளன. எனவே, விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE