பேபி அணையில் மரம் வெட்ட அனுமதி... ரத்து: கேரளத்தின் நாடகத்திற்கு விவசாயிகள் கண்டனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேபி அணையில் மரம் வெட்ட அனுமதி... ரத்து: கேரளத்தின் நாடகத்திற்கு விவசாயிகள் கண்டனம்

Added : நவ 09, 2021
Share
கூடலுார்:பெரியாறு அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடைஞ்சலாக உள்ள மரங்களை வெட்டும் பிரச்னையில் அனுமதி, ரத்து என மாறி மாறி பேசுவது, நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் கேரள அரசின் நாடகம் என விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 152 அடி உயரம் கொண்ட பெரியாறு அணை 1895ல் கட்டி முடிக்கப்பட்டு 1979 வரை தேனி, திண்டுக்கல்,
 பேபி அணையில் மரம் வெட்ட அனுமதி... ரத்து: கேரளத்தின் நாடகத்திற்கு விவசாயிகள் கண்டனம்

கூடலுார்:பெரியாறு அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடைஞ்சலாக உள்ள மரங்களை வெட்டும் பிரச்னையில் அனுமதி, ரத்து என மாறி மாறி பேசுவது, நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் கேரள அரசின் நாடகம் என விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 152 அடி உயரம் கொண்ட பெரியாறு அணை 1895ல் கட்டி முடிக்கப்பட்டு 1979 வரை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கரில் எவ்வித பிரச்னையும் இன்றி இரு போக சாகுபடி செய்யப்பட்டு வந்தது. குடிநீர் பிரச்னையும் இல்லை.

1979 ல் அணை பலமிழந்து உள்ளதாக கேரளா கூறிய புகாரைத் தொடர்ந்து நீர்மட்டம் 136 அடியாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பின் பல இடங்களில் ஒரு போகமாக மாறியது. குடிநீருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் அணை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்தப்பட்டு உறுதித்தன்மை பல்வேறு நிபுணர் குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டு 2014 மே 7 ல் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது.

'142 அடி தண்ணீர் தேக்கலாம், அணையை ஒட்டியுள்ள பேபி அணையைப் பலப்படுத்தியபின் முழுக்கொள்ளளவான 152 அடியாக உயர்த்தலாம்' என அந்த தீர்ப்பில் கூறப்பட்டது. ஆனால், பேபி அணையைப் பலப்படுத்த கேரளா முட்டுக்கட்டை போட்டது.


மரம் வெட்ட தடைஅணையை பலப்படுத்துவதற்கு அதனை சுற்றியுள்ள 15 மரங்களை வெட்ட வேண்டும். இதற்கு தமிழக பொதுப்பணித்துறையினர் மத்திய வன அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர். வெட்டக்கூடிய மரங்களில் நம்பர் போட்டு அதனை போட்டோ எடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய தமிழக உதவி செயற்பொறியாளர் மீது தங்கள் வனத்துறையின் அனுமதியின்றி பணிகளை செய்ததாக கேரளா வழக்கு தொடர்ந்தது.

பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அணையைப் பலப்படுத்தி விட்டால் நீர்மட்டம் 152 தேக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால் கேரளா இவ்வாறு செய்வதாக அப்போதே புகார்கள் எழுந்தன.


மரங்களை வெட்ட அனுமதி

இந்நிலையில் 15 மரங்களை வெட்ட நவ.6ல் அனுமதி வழங்கியதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். ஆனால் மறுநாளே (நவ. 7) இந்த உத்தரவை ரத்து செய்வதாக கேரள அரசு கூறியது வழக்கம்போல் கேரள அரசு நடத்தும் நாடகம்தான் என தமிழக விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.


கேரளா நாடகம் அரங்கேற்றம்செங்குட்டுவன், தலைவர், கூடலுார் விவசாய சங்கம்: பேபி அணையைப் பலப்படுத்தாமல் தடுப்பதற்காக கேரள அரசு, அதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த வண்ணம் உள்ளனர். தமிழக அரசு பெயரளவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கை மட்டும் தாக்கல் செய்து விட்டு மெத்தனம் காட்டி வருகிறது. மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்ததுபோல் கொடுத்து விட்டு மறுத்து நாடகம் நடத்துகிறது.ஒன்றாக போராடினால் 152 அடி உயர்த்தலாம்

கே.எம்.அப்பாஸ், விவசாய சங்க தலைவர், கம்பம்: கேரளாவில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் பெரியாறு அணை விஷயத்தில் ஒற்றுமையாக உள்ளன. அதனால்தான் நீர்மட்டத்தை உயர்த்த முடியவில்லை. அதே போன்று தமிழகத்திலும் அனைத்து கட்சிகளும் ஒன்றாக போராடினால் பேபி அணையை பலப்படுத்துவது மட்டுமின்றி பெரியாறு நீர்மட்டத்தையும் 152 அடியாக உயர்த்தி விடலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X