வாகனங்களுடன் போட்டி போட்ட வாலாங்குளம் நீர்! திருச்சி ரோட்டில் ஆறாக பெருக்கெடுத்த அவலம்| Dinamalar

வாகனங்களுடன் 'போட்டி போட்ட' வாலாங்குளம் நீர்! திருச்சி ரோட்டில் ஆறாக பெருக்கெடுத்த அவலம்

Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
கோவை: வாலாங்குளத்தில் இருந்து வெளியேறிய உபரி நீர், ராமநாதபுரம் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ரோட்டில் வாய்க்கால் வெட்டி, தண்ணீர் வழிந்தோட வழியேற்படுத்திய கொடுமையை, மாநகராட்சி ஊழியர்கள் அரங்கேற்றினர்.கோவை, வாலாங்குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர், காந்தி நகர் மற்றும் மசால் லே-அவுட் வழியாக புலியகுளம், அம்மன் குளம் சென்றடைந்து சங்கனுார் பள்ளத்தில் கலக்ககோவை: வாலாங்குளத்தில் இருந்து வெளியேறிய உபரி நீர், ராமநாதபுரம் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
ரோட்டில் வாய்க்கால் வெட்டி, தண்ணீர் வழிந்தோட வழியேற்படுத்திய கொடுமையை, மாநகராட்சி ஊழியர்கள் அரங்கேற்றினர்.கோவை, வாலாங்குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர், காந்தி நகர் மற்றும் மசால் லே-அவுட் வழியாக புலியகுளம், அம்மன் குளம் சென்றடைந்து சங்கனுார் பள்ளத்தில் கலக்க வேண்டும். ஆனால், வாய்க்கால் முழுவதும் கழிவு மண் அடைத்திருப்பதால் தண்ணீர் செல்ல வழியின்றி, திருச்சி ரோட்டில் நேற்று ஆறு போல் பெருக்கெடுத்தது.நகர் பகுதியில் பெய்யும் மழை நீர், கழிவு நீரோடு கலந்து வாலாங்குளத்தை வந்தடைகிறது. இதன் உபரி நீர், காந்தி நகர், போலீஸ் கந்தசாமி லைன் வீதி, மசால் லே-அவுட் வழியாக புலியகுளம் வந்தடைய வேண்டும்.இங்கிருந்து மசக்காளிபாளையம் ரோட்டில் உள்ள வாய்க்காலில் பயணித்து, சங்கனுார் பள்ளத்தில் கலக்க வேண்டும்.
வாய்க்காலில் கழிவு மண் அடைத்திருப்பதால், தண்ணீர் செல்ல வழியில்லாமல் இருக்கிறது.காற்றில் கரைந்த எச்சரிக்கை!வாலாங்குளம் நிரம்பும்போது, உபரி நீர் செல்ல வழியில்லாவிட்டால், சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படும். நீர் வழித்தடத்தில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தி இருந்தனர். மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்திருந்தனர்.திருச்சி ரோட்டில் உள்ள, மழை நீர் வடிகால் போதிய பலமில்லாமல் இருப்பதால், குளத்து நீரை அனுப்பும்போது, பொங்கி, ரோட்டில் வழியவே வாய்ப்பிருக்கிறது என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவே இல்லை.மாநகராட்சி அலட்சியம் ஏன்?பருவமழை துவங்கும் முன், வாய்க்கால்களை துார்வாரி, தண்ணீர் வடிந்து செல்ல முன்னேற்பாடுகள் செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. வாய்க்காலை துார்வாராமல், மாநகராட்சி பொறியியல் பிரிவினர் அலட்சியமாக விட்டு விட்டனர். தற்போது இடுப்பளவுக்கு கழிவு மண் தேங்கியிருப்பதோடு, குப்பையால் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டிருக்கிறது.சாலையில் பெருக்கெடுத்த தண்ணீரை, போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார், மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.அப்போது, மழை நீர் வடிகால் மற்றும் வாய்க்காலில் உள்ள அடைப்புகளை அகற்றாமல், பொக்லைன் வாகனத்தால் ரோட்டில் குழி தோண்டி, தண்ணீர் செல்ல வழியேற்படுத்தினர்.இதனால், ராமநாதபுரம் சிக்னல் வரை ரோட்டில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின், தாழ்வான பகுதியில் இறங்கி, அல்வேர்னியா பள்ளி அருகில் உள்ள சங்கனுார் பள்ளத்தில் கலந்தது.மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமான செயல்பாட்டால், ராமநாதபுரம் பகுதி முழுவதும் நேற்று தண்ணீர் காடாக காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். திருச்சி ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம் ரோட்டில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது; போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல், போலீசார் திணறினர்.துார் வார ஏற்பாடு செய்து வருகிறோம்!மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'உக்கடம் பெரிய குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.இக்குளத்தின் கொள்ளளவு குறையும்போது, வாலாங்குளத்தில் உள்ள தண்ணீர் 'ரிவர்ஸ்' ஆகி, உக்கடம் குளத்தை நிரப்பும். வாலாங்குளத்தின் உபரி நீர் ரோட்டில் வழிந்தோடும் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும்.காந்தி நகரில் இருந்து மசால் லே-அவுட் வழியாக புலியகுளம் சந்திப்பு வரை செல்லும் வாய்க்காலில் கழிவு மண் தேங்கியிருக்கிறது; அந்தந்த பகுதியில் பெய்யும் மழை நீர் வடிந்தோடிச் செல்லவே பாதையில்லை. காந்தி நகர் மற்றும் மசால் லே-அவுட் வாய்க்காலை துார்வார ஏற்பாடு செய்து வருகிறோம்' என்றனர்.பருவமழை பெய்வது முன்பே தெரிந்திருந்தும், வாய்க்காலை துார்வாராமல் அலட்சியமாக இருந்தது ஏனோ?மசால் லே-அவுட்மக்கள் 'காரசாரம்'மசால் லே-அவுட் பகுதி மக்கள் கூறுகையில், 'ஆறடி ஆழத்துக்கு வாய்க்கால் இருக்கிறது. மழை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கியிருக்கிறது. மழை பெய்தபோது, கழிவு நீரோடு பொங்கி, வீட்டுக்குள் வந்து விட்டது. துர்நாற்றம் வீசுகிறது.மசால் வீதி, போலீஸ் கந்தசாமி லைன் வீதி, மசால் லே-அவுட் பகுதியில் வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் ரோட்டில் வழிந்தோடி வரும் மழை நீர் செல்ல, வழித்தடம் இல்லாமல் இருக்கிறது. பொக்லைன் வருவதற்கு பாதையில்லை என கூறி, வாய்க்காலை துார்வாராமல் இருக்கின்றனர்.
ஊழியர்கள் மூலமாக தோண்டி அள்ளி, தலைச்சுமையாக மண்ணை அகற்றினால் மட்டுமே துார்வார முடியும்' என்றனர்.இது ஸ்மார்ட் சிட்டி செய்த 'அட்ராசிட்டி'வாலாங்குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேற ஓரிடத்தில் களிங்கு, ஆறு இடங்களில் மதகுகள் இருந்தன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 116 கோடி ரூபாய் செலவில் இக்குளத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.கரையில் நடைபாதை, பொழுதுபோக்கு கட்டமைப்பு ஏற்படுத்துவதற்காக, நீர் தேக்கும் பரப்பு சுருக்கப்பட்டுள்ளது. உபரி நீர் செல்லும் வழியையும் சுருக்கி விட்டனர். குளக்கரையில் ரோடு போட்டபோது, மதகுகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு விட்டன. மீதமிருந்த ஒரு மதகையும், 'ஸ்மார்ட் சிட்டி' வேலையின்போது மூடி விட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X