காட்டுமன்னார்கோவில் : காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, முக்கொம்பு மேல் அணையில் இருந்து கீழணை கொள்ளிடம் ஆற்றில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணை நிரம்பி அபாய நிலையை எட்டியதால் அணையில் இருந்து நேற்று காலை 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டன. அதனால் மேல் அணையான முக்கொம்பில் இருந்து நேரடியாக கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆறு வழியாக கல்லணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால், அங்கிருந்து கீழணை கொள்ளிடம் ஆற்றில் 7,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தஞ்சை, கடலுார் டெல்டா பகுதியிலும் பலத்த மழை பெய்வதால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வில்லை. அதனால் கீழணைக்கு வரும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வடிகால் ஆறான கீழ் கொள்ளிடம் ஆற்றில் திறந்து வெளியேற்றப்படுகிறது. கீழணையில் நீர் மட்டம் 7.5 அடியாக உள்ளது.
இந்த ஆண்டு வடக்கிழக்கு பருவ மழையால் 2.75 முதல் 3 லட்சம் கன அடி கொள்ளளவு கொண்ட கொள்ளிடம் ஆற்றில் இருந்து எட்டாவது நாளாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.வீராணம் ஏரியின் நீர் மட்டம் 45.10 அடியாக உள்ளது.
அரியலுார் மாவட்ட மழையால் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை வழியாக வடவாற்றில் 450 கன அடியாக உள்ளது. இதனால் வடவாறு ஜூரோ பாயிண்ட் மதகு வழியாக வெள்ளியங்கால் ஓடையில் 400 கன அடி தண்ணீர் திறந்து விடப் படுகிறது. இதனால் வீராணம் ஏரிக்கு 59 கன அடி தண்ணீர் வரத்தாக இருந்தது. ஏரியில் இருந்து பூதங்குடி வி.என்.எஸ் மதகு வழியாக வெள்ளாற்றில் 125 கன அடி தண்ணீரும், சென்னை குடிநீருக்கு 59 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE