சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டி தரக்கோரி, பள்ளி மாணவ, மாணவியர் 400க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், அடர்ந்த வனப்பகுதியில் மாக்கம்பாளையம், கோவிலூர், கோம்பைதொட்டி, அரிகியம் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு, குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரை பள்ளம் என இரு காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும். மழை காலங்களில் இரு காட்டாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், அரசு பஸ் போக்குவரத்து தடைபடுவது தொடர்கதையாக உள்ளது. காட்டாறு வெள்ளப்பெருக்கால் கடந்த மூன்று நாட்களாக பஸ் இயக்கம் ரத்தானதால், மலை கிராம மக்கள், வேலைக்கு செல்ல முடியவில்லை. அரசுப்பள்ளி மாணவ, மாணவியரும் பாதித்துள்ளனர். இந்நிலையில் மாக்கம்பாளையம், அரிகியம் சுற்று வட்டார மலை கிராமங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 400க்கும் மேற்பட்டோர், அப்பகுதியினர், கடம்பூர் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடம்பூர்-சத்தி சாலையில் போக்குவரத்து பாதித்தது. கடம்பூர் போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்க மறுக்கவே, ஈரோடு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாசங்கர், சத்தி டி.எஸ்.பி., ஜெயபாலன், தாசில்தார் ரவிசங்கர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மண் சாலையை, தார்ச்சாலையாக அமைத்து தரவேண்டும். குரும்பூர்பள்ளம், சக்கரைபள்ளத்தின் குறுக்கே பாலம் கட்டி, நிதி ஒதுக்கியும் பணி தொடங்கவில்லை. கட்டுமான பணிகளை துவங்க வேண்டும். மாக்கம்பாளையம், குன்றி மலை கிராமங்களுக்கு செல்போன் டவர் அமைத்து தரவேண்டும் என்று கூறி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறவே, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE