ஈரோடு: தீபாவளி விடுமுறைக்கு சென்ற தொழிலாளர்கள், பணிக்கு முழுமையாக திரும்பாததால், 25 சதவீத விசைத்தறிகள் மட்டுமே இயக்கத்துக்கு வந்துள்ளன.
ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சோலார், சித்தோடு, விஜயமங்கலம், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. இத்தறிகளில் நேரடியாக, மறைமுகமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். தீபாவளி பண்டிகைக்காக விசைத்தறி கூடங்களுக்கு கடந்த, 2 மற்றும், 3 முதல் ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டது. பெரும்பாலான விசைத்தறி தொழிலாளர்கள், வெளியூர் என்பதால், சொந்த ஊர்களுக்கு சென்றனர். உள்ளூர் தொழிலாளர்கள், நான்கு நாள் விடுமுறைக்குப்பின் நேற்று முன்தினம் முதல் படிப்படியாக பணிக்கு திரும்பியுள்ளனர். இதனால், 25 சதவீத விசைத்தறிகள் இயக்கத்துக்கு வந்துள்ளன. தற்போது தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி நடந்து வருகிறது. அதேநேரம், நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெளி நபர்களின் ஆர்டர்கள் பெறுவதில் விசைத்தறியாளர்கள் சற்று தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலான விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளதாக, விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE