முதல்வர் ஸ்டாலின்: கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சி நடந்தது. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி முதல்வராக இருந்தனர். மழையின்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க, 3,000 கோடி, 4,000 கோடி ரூபாய் ஒதுக்கியும் என்ன செய்தனர் என தெரியவில்லை. பணிகள் நடந்ததாக, பழனிசாமி பொய் கூறுகிறார். மக்களுக்கு உண்மை தெரியும். அதனால் தான், சென்னை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெற்றது.
'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், அ.தி.மு.க., வென்ற, 75 இடங்களில், அ.தி.மு.க.,வினர் நியாயவாதிகளாக இருந்தனரா அல்லது அங்கு போட்டியிட்ட, தி.மு.க.,வினர் மற்றும் தோழமை கட்சியினர் ஊழல்வாதிகளாக இருந்தனரா... உங்களின் பேட்டி, பல விதமான, 'டவுட்'டுகளை கிளப்புகிறதே!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: சென்னை, மக்கள் வாழ்விடமா அல்லது மழைக்கால ஏரி, குளமா... இத்தனை ஆண்டுகளாக சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக் கொள்பவர்கள், இத்தனை ஓட்டையாக வைத்திருப்பர் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
'டவுட்' தனபாலு: ஆட்சிக்கு வருபவர்கள் நாணயமற்றவர்களாக இருந்ததால் ஏற்பட்ட சிக்கல் இது. பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக தான் பெரும்பாலான பணிகள் நடக்கின்றன. அந்த பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதைத் தான், இந்த ஓட்டைகள் சுட்டிக் காண்பிக்கின்றன. இதுபோன்ற வேலைகளில் தான் ஊழல் பேர்வழிகள் லாபம் பார்க்கின்றனர். தமிழகத்தின் சாபக்கேடான இந்நிலை எப்போது மாறுமோ என்பது தான் நடுநிலையாளர்களின், 'டவுட்!'
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: முல்லை பெரியாறு அணையை திறப்பதற்கு, தமிழகத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது. ஆனால், கடந்த மாதம் அணையின் நீர்மட்டம், 139 அடியை எட்டுவதற்கு முன்பாகவே கேரள அமைச்சர்கள் சென்று, தண்ணீரை ஏன் வெளியேற்றினர் என்று கேட்டால், அமைச்சர் துரைமுருகன் சம்மந்தமில்லாமல் பதில் அளிக்கிறார்.
'டவுட்' தனபாலு: தமிழகத்தின் கட்டுப்பாட்டில் முல்லை பெரியாறு இருந்தாலும், அதை எளிதில் அணுக முடியாத வகையில், கேரள அரசு அதிகாரிகள் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகின்றனர். இதனால் தமிழக அதிகாரிகளால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதுபோன்ற பிரச்னைகளால் தான், அடர்ந்த வனத்தில் இருக்கும் அந்த அணையில் காலம் காலமாக சிக்கல் நீடிக்கிறதோ என்ற, 'டவுட்' நீண்ட காலமாக உண்டு. அதை மறைக்கும் விதமாகத் தான், அமைச்சரும் ஏதேதோ கூறுகிறாரோ?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE