மொபைல் போன் அழைப்பு விபரங்களை விற்ற போலீசார்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மொபைல் போன் அழைப்பு விபரங்களை விற்ற போலீசார்!

Added : நவ 10, 2021 | கருத்துகள் (2)
Share
மொபைல் போன் அழைப்பு விபரங்களை விற்ற போலீசார்!''மாநகராட்சி வருமானத்துல கை வச்சுட்டாங்க பா...'' என, டீயை உறிஞ்சியபடியே விவாதத்தை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''சென்னை சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்ட்ல, சில வருஷங்களா மாநகராட்சியில முறையா 'டெண்டர்' அனுமதி வாங்கி, பெரிய நிறுவனங்கள் விளம்பரங்களை வச்சிருந்தாங்க...

டீ கடை பெஞ்ச்


மொபைல் போன் அழைப்பு விபரங்களை விற்ற போலீசார்!


''மாநகராட்சி வருமானத்துல கை வச்சுட்டாங்க பா...'' என, டீயை உறிஞ்சியபடியே விவாதத்தை ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''சென்னை சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்ட்ல, சில வருஷங்களா மாநகராட்சியில முறையா 'டெண்டர்' அனுமதி வாங்கி, பெரிய நிறுவனங்கள் விளம்பரங்களை
வச்சிருந்தாங்க...
''அ.தி.மு.க., ஆட்சியின் கடைசி கட்டத்துல, அந்த நிறுவனங்களின் விளம்பர அனுமதிக்கான காலக்கெடு முடிஞ்சிடுச்சு பா...

''ஆனா, அப்ப இருந்த ஆளுங்கட்சியினர், அதிகாரிகளின் ஆசியோட, விளம்பரங்களை அகற்றாம இருந்தாங்க... சரி, ஆட்சி மாறியதும், அந்த விளம்பரங்களை நீக்கிடுவாங்கன்னு பார்த்தா, பழைய கதையே
தொடருது...

''மாநகராட்சிக்கு வர வேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய், ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் பாக்கெட்டுகளுக்கு போயிட்டு இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

''போலீசார்கிட்டயே லஞ்சம் வாங்கறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.

''எந்த ஊருல, யாருவே அது...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''வேலுார் சத்துவாச்சாரியில, எஸ்.பி., அலுவலகம் இருக்கு... இங்க நிர்வாக பணிகளை, அமைச்சு பணியாளர்கள் செய்றா ஓய்...

''போலீசார் வீடு கட்ட கடன், இடமாறுதல் சான்றிதழ்களை எல்லாம் இவா தான் தரணும்... ஆனா, அமைச்சு பணியாளர்களுக்கு லஞ்சம் தராம, ஒரு காரியமும்
நடக்காது ஓய்...

''இது சம்பந்தமா, போலீஸ் குறைதீர் கூட்டங்கள்ல வெளிப்படையாகவே போலீசார் புகார் தெரிவிச்சா...

''யார் யார் லஞ்சம் வாங்கறான்னு நல்லா தெரிஞ்சும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அடக்கியே வாசிக்கறா ஓய்... 'எஸ்.பி., ஆபீஸ்லயே எப்படி லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தறது' அப்படிங்கற தயக்கம் தான் காரணம்...'' என்றார் குப்பண்ணா.

''என்கிட்டயும் ஒரு போலீஸ் ஸ்டோரி இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''கோவை சைபர் கிரைம் போலீஸ்ல நிறைய விதிமீறல்கள் நடக்குதுங்க...

''வழக்கு விசாரணைக்காக, எந்த மொபைல் போன் அழைப்பு விபரங்களை சேகரிக்கணும்னாலும், அதுக்குன்னு நிறைய விதிமுறைகள் இருக்குதுங்க...

''ஆனா, இந்த பிரிவு போலீசார் பலர், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாம, தனிப்பட்ட சிலருக்கு மொபைல் போன் அழைப்பு விபரங்களை சட்டவிரோதமா எடுத்து குடுத்திருக்காங்க...

''இதுக்கு, 10 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாங்கியிருக்காங்க...

''பல நாளா நடந்துட்டு இருந்த இந்த விஷயம், போன மாசம் ஒரு கடத்தல் வழக்குல போலீஸ்காரரே கைதானதுல அம்பலத்துக்கு வந்துடுச்சுங்க...

''யார் யார், எந்தெந்த வழக்குகளுக்காக மொபைல் போன் அழைப்பு விபரங்களை திரட்டுனாங்கன்னு, விசாரணை நடந்துட்டு இருக்குதுங்க... இதனால, சைபர் கிரைம் போலீசார் பீதியில இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.

''வானம் மேகமூட்டமா இருக்குல்லா... மழை வர்றதுக்குள்ள வீட்டுக்கு போயிரலாம்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X