செஞ்சி-தேவதானம்பேட்டை ஏரியில் ஏற்பட்ட உடைப்பை மணல் மூட்டைகள் கொண்டு தற்காலிகமாக அதிகாரிகள் சீரமைத்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. இதில், தேவதானம்பேட்டையில் உள்ள ஏரியின் உபரி நீர் வெளியேறி வருகிறது.இந்த ஏரியில் சில மாதங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட மதகின் அருகே நேற்று லேசான உடைப்பு ஏற்பட்டது. இதில் இருந்து தண்ணீர் கசிந்து ஏரி உடைவதற்கான வாய்ப்பு இருந்தது.இது குறித்து ஒன்றிய கவுன்சிலர் சீனுவாசன், ஊராட்சித் தலைவர் அன்னமயில் ஜெயராமன் ஆகியோர் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.உடன், மழை பாதிப்பு சிறப்பு அலுவலர் ரகுகுமார், தாசில்தார் பழனி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தினேஷ் ஆகியோர் விரைந்து சென்று ஏரியை பார்வையிட்டனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தில் 150 மணல் மூட்டைகளைக் கொண்டு உடைப்பை தற்காலிகமாக சீரமைத்தனர். தொடர்ந்து, வருவாய்த் துறையினரும், பொதுப்பணித் துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.செஞ்சி பகுதியில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றான இந்த ஏரி உடைந்திருந்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். உரிய நேரத்தில் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE