சென்னை: ''சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க, விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும்,'' என தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி., கூறினார்.
சென்னை தி.நகரில், தனியார் அறக்கட்டளை சார்பில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் நிவாரண உதவி பொருட்களை வழங்கும் பணியை கனிமொழி நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி:

சென்னையில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி, காட்சி அளிப்பது நீண்ட கால போராட்டமாகவே உள்ளது. நீர் வழி பாதைகளை மறித்து வீடுகள் மற்றும் கட்டடங்கள் கட்டியதே இதற்கு முக்கிய காரணம். இதற்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. மத்திய அரசு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதி என்னவானது என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்; ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்துாரில் நிச்சயமாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மழை காலத்தில், மக்களுக்கு உதவாமல், அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.