லித்தியம் அயனி மின்கலன்கள் இப்போது ஏறுமுகத்தில் இருக்கின்றன. மொபைல் போன்கள் முதல் மின் வாகனங்கள் வரை பலவித கருவிகளை இயக்கும் லித்தியம் மின்கலன்கள் சில ஆண்டுகளில் குப்பை மேட்டுக்கு வந்து விடுகின்றன.
இவை சிக்கலான உலோகங்களை வீணடிப்பதுடன், சுற்றுச்சூழலையும் கெடுக்கின்றன. எனவே, இப்போதிருந்தே, விஞ்ஞானிகள், லித்தியம் மின் கலன்களை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் லித்தியம் மின் கலன்களை உடைத்து, அழித்து அதிலுள்ள உலோகங்களை செம்மையாக பிரித்தெடுக்கும் முறையை உருவாக்கியுள்ளனர்.சுரங்கத் தொழிலில், தாதுக்களை பிரித்தெடுக்கும் ஒரு முறையை, சற்றே மேம்படுத்தி, அவர்கள் இந்த முறையை உருவாக்கினர்.
உடைத்தெடுக்கப்பட்ட மின் கலன் குப்பையை உருக்கி, அந்த உலோகக் கொதிகலனில், நீர் மற்றும் இதர வேதிப் பொருட்களை சேர்த்தால், 'நிக்கல் மாங்கனீசு கோபால்ட் ஆக்சைடை' பிரித்தெடுக்கலாம் என அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால், லித்தியம் போன்ற குறைவாக உற்பத்தியாகும் உலோகத்தினை மறு சுழற்சி செய்யலாம்.சுரங்கங்களின் மீதுள்ள சுமையையும், சுற்றுச்சூழல் மீதுள்ள பாரத்தையும் குறைக்க முடியும். இந்த புதிய மறுசுழற்சி முறை வேகமாகப் பரவும் என்பதில் சந்தேகமில்லை.