நாயர் தந்த சூடான மெது வடையை கடித்தபடியே, ''கேன்டீன் இல்லாம ரொம்பவே சிரமப்படுதாவ வே...'' என, பேச்சை துவக்கினார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, அண்ணா சாலையில மின்வாரிய தலைமை அலுவலகம் இருக்குல்லா... இங்க, 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்தாவ வே...
''இவங்களுக்கு வளாகத்துலயே, 'கேன்டீன்' இருந்துச்சு... டெண்டர் விட்டு தான், கேன்டீனுக்கு அனுமதி தருவாவ வே... என்ன தான் டெண்டர் எடுத்தாலும், கேன்டீன் நடத்துறவங்க, அதிகாரிகளை முறையா கவனிக்கணும்...
''கொரோனா ஊரடங்கால, 2020ல மூடப்பட்ட கேன்டீன் அப்புறமா திறக்கவே இல்ல வே... இது சம்பந்தமா, ஊழியர்கள் தரப்புல, அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கல... இதனால, ஊழியர்கள் சாப்பாட்டுக்கு ரொம்பவே திண்டாடுதாவ வே...'' என, முடித்தார்
அண்ணாச்சி.
''மரம் நடுங்கன்னு பிள்ளைகளுக்கு சொல்லி தர்றவரே, மரத்தை வெட்ட உடந்தையா இருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.
''யாருங்க அந்த வாத்தியார்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பில்லிக்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்துல இருந்த மரங்களை சிலர் வெட்டி கடத்திட்டு போனாங்க... குறிப்பா, நல்ல விலைக்கு போகும் தைல மரங்கள் மற்றும் சோலை மரங்களை வெட்டி, குறைந்த விலைக்கு வித்திருக்காங்க பா...
''இதுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியரும் உடந்தையா இருந்திருக்கார்... இது சம்பந்தமா பொதுமக்கள் தந்த புகாரை அடுத்து, உள்ளூர், வி.ஏ.ஓ., போய், மரம் வெட்டுறதை தடுத்து நிறுத்தியிருக்காரு பா...
''தலைமை ஆசிரியர் பற்றி, மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலருக்கு பொதுமக்கள் புகார் தெரிவிச்சும், எந்த நடவடிக்கையும் எடுக்கலை பா...'' என்றார் அன்வர்பாய்.
''ஆனந்த் இங்க உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, ''இடமாறுதல் போட்டும், 'டூட்டியில ஜாயின்' பண்ணாம இருக்கா ஓய்...'' என்றார்.
''எந்த துறை அதிகாரிகளை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''போன, அ.தி.மு.க., ஆட்சியில நடந்த டெண்டர் முறைகேடு புகார்ல சிக்குன, கோவை மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளை, வேலுார், ஈரோடு, மதுரை மாநகராட்சிகளுக்கு துாக்கியடிச்சால்லியோ...
''இதுல, மதுரைக்கு மாத்துன அதிகாரி ஒரு மாசத்துக்கு மேலாகியும் இன்னும், 'ஜாயின்' பண்ணவே இல்லை... அவரை கோவையில இருந்து, 'ரிலீவ்' பண்ணிட்டா..
.
''மதுரைக்கு போனவர், 'என் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடிண்டு இருக்கேன்... அதனால, பொறுப்பேற்றாலும் லீவ்ல போயிடுவேன்'னு சொல்லியிருக்கார்... இதைக் கேட்ட உயர் அதிகாரி, அவரை திருப்பி அனுப்பிட்டாராம் ஓய்...
''இதனால, அவருக்கு பதிலா கோவைக்கு நியமிக்கப்பட்ட மதுரை மாநகராட்சி நிர்வாக பொறியாளரையும் ரிலீவ் பண்ணாமலே இருந்தா... ஒரு வழியா நேத்து தான், மதுரை அதிகாரி கோவைக்கு வந்து பொறுப்பு ஏத்திருக்கார்... பொதுவா, அரசு துறைகள்ல இடமாறுதல் போட்டா, ஒரு வாரத்துக்குள்ள புதிய இடத்துல சேர்ந்துடணும்... ஆனா, அதை யாருமே பொருட்படுத்த மாட்டேங்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''ரவிச்சந்திரன் ஊருக்கு போயிட்டு எப்ப வந்தீரு...'' என, நண்பரிடம் அண்ணாச்சி நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE