அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அ.தி.மு.க.,வினர் ஆங்காங்கே உணவு வழங்கியதால் தான், 'அம்மா' உணவகத்தில், இலவச உணவு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, எங்களுக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் சத்தம் போட்டதால், இதை செய்துள்ளனர்.
'டவுட்' தனபாலு: அப்படியே, அ.தி.மு.க., சார்பில், மாநிலத்தின் பல இடங்களில், தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, களத்தில் இறங்கினால், அதை அரசும் பின்பற்றி, தகுந்த நடவடிக்கை எடுக்குமோ என்ற, 'டவுட்' வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, உங்கள் கட்சியினர் எப்போது களத்தில் இறக்கி விடப்பட உள்ளனர்...
கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி: ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில், 39 ஆயிரத்து, 500 ஏரிகள், குளம், குட்டைகள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதில், 7,000 ஏரிகளை காணவில்லை. பஸ் ஸ்டாண்ட், அரசு கட்டடங்கள், வீடுகளாக ஏரிகள் மாற்றப்பட்டு விட்டன. அது தான், மழை வந்தால் ஊருக்குள் வெள்ளம் ஏற்பட காரணம்.
'டவுட்' தனபாலு: மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் கள் விற்பனைக்காக கொடி பிடித்து வருகிறீர்கள். ஆனால், ஒருமுறை கூட, காணாமல் போன நீர்நிலைகளை கண்டுபிடிக்க கோரியோ அல்லது மழை, வெள்ளப் பாதிப்புகளை சரி செய்ய வேண்டியோ, போராட்டம் நடத்தியதில்லை. எப்படியோ, பிற தலைவர்கள் போல, ஏதோ ஒரு விஷயத்தை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்கள். அனைவரும் வெள்ளப் பாதிப்பு பற்றியே பேசினால், பாதிப்புக்கு, அதிக அளவில் மழை பெய்தது தான் காரணம் என்பதை அவர்கள் மறந்து விட்டனரோ என்ற, 'டவுட்' தி.மு.க.,வினருக்கு
வந்திருக்கும்!
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: அரசு கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்காததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைக்கும் நிலையில் உள்ளன. டெல்டா மாவட்டங்களில் மட்டும், 40 லட்சம் நெல் மூட்டைகள் சாலையிலே வைக்கப்பட்டு, 20 ஆயிரம் மூட்டைகளில் முளைக்க ஆரம்பித்து விட்டது. இதே நிலை தான், தமிழகம் முழுதும் நிலவுகிறது.
'டவுட்' தனபாலு: அறுவடையாகி இரண்டு மாதங்களுக்கும் மேலாகிறது. துவக்கத்திலிருந்தே கொள்முதல் நிலையங்களின் செயல்பாடு, சொதப்பலாகவே இருந்தது. அதை எதிர்க்கட்சிகள் தினமும் கண்டித்தன. அதனால் தான், நெல் கொள்முதல் நிலையங்களை அரசு கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதோ; அதனால் தான் இப்போது நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளதோ என்பன போன்ற, 'டவுட்'டுகள் வருகின்றன!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE