உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: வன்னியருக்கு தமிழக அரசு ஒதுக்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, பா.ம.க.,வினர் அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்து, வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அராஜகச் செயலுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி ஆகியோர் எந்தவித கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்காமல் உள்ளனர். அவர்களின் மவுனம், பா.ம.க.,வினரின் அடாவடி செயலை ஆதரிப்பது போல உள்ளது. பொது மக்கள் சொத்தை சேதப்படுத்த, பா.ம.க.,வினருக்கு என்ன உரிமை உள்ளது?

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யலாம்; அரசுடன் பேச்சு நடத்தலாம்; பேரணி, உண்ணாவிரதம் போன்ற போராட்டம் நடத்தி எதிர்ப்பைக் காட்டலாம். இப்படி எதிர்ப்பைக் காட்ட, நாகரிகமான முறையில் பல வழிகள் இருக்கையில், பொது சொத்தை சேதப்படுத்துவது என்பது காட்டுமிராண்டி செயல். பா.ம.க.,வினர் என்றாலே, மரங்களை வெட்டுவர், பேருந்தை உடைப்பர் என்ற அவப்பெயர், மக்களிடையே உள்ளது.
வன்முறையும், அராஜகமும் தான் தங்களது கட்சியின் பிரதான கொள்கையும், கோட்பாடும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர், பா.ம.க.,வினர். ராமதாஸ் நேர்மையானவராக இருந்தால், அவரது கட்சியினர் சேதப்படுத்திய அரசு பேருந்தின் நஷ்டத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE