ஆட்சி மாறியதும், செய்தித்துறையில் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்; தலைமைச் செயலகத்தில், தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், தி.மு.க., ஆட்சியில் தேர்வான உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் யாரும் இல்லை. இதனால், தலைமைச் செயலகத்தில், கடந்த ஆட்சியில் பணிபுரிந்த உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களை மாற்றவில்லை. ஆனால், அவர்களை உயர் அதிகாரிகள் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்ப்பதோடு, அவமரியாதையாக நடத்துறாங்களாம்.
பேரிடர் சமயங்களில் கூடுதல் பணி இருக்கும் என்பதால், பிற அலுவலகங்களில் பணிபுரியும், ஏ.பி.ஆர்.ஓ.,க்கள், பி.ஆர்.ஓ.,க்கள், தலைமைச் செயலக பணிக்கு மாற்றப்படுவர்; இம்முறை அவ்வாறு செய்யவில்லை. வழக்கமாக பணியில் இருக்கும், ஐந்து ஏ.பி.ஆர்.ஒ.,க்களிடமே, இரவு பகலாக அனைத்து வேலைகளும் வாங்குறாங்களாம். 'வேலை செய்வது ஒரு பிரச்னை இல்லை; நம்மை அ.தி.மு.க.,வினராக நினைத்து, உயர் அதிகாரிகள் கேவலப்படுத்துவது தான் வலிக்கிறது; இதற்கு எங்களை வேறு எங்காவது மாற்றினால் நல்லது' என, அவர்கள் புலம்புகின்றனர்.
ஊட்டியில் எஸ்டேட் வாங்கும் எம்.எல்.ஏ.,?
கன்னியாகுமரி, நீலகிரி மாவட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து ஆய்வு செய்ய, தமிழக காங்., சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் குழு ஒன்றை, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நியமித்தார். அக்குழுவில் இடம் பெற்றுள்ள செல்வப்பெருந்தகை, விஜயதாரணி, ரூபி மனோகரன், பிரின்ஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் சமீபத்தில், நீலகிரி மாவட்டம், கூடலுார் மலைவாழ் மக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இந்த ஆய்வு கூட்டம் முடிந்ததும், கூடலுாரில் டீ எஸ்டேட் வைத்துள்ள, கட்சியின் 'மாஜி' எம்.எல்.ஏ., அருள் அன்பரசு வீட்டில் நடந்த விருந்தில் விதவிதமாக ருசித்தனர். விருந்தில் பங்கேற்ற ஒரு எம்.எல்.ஏ., மட்டும், அந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம், 'ஊட்டியில் எஸ்டேட் மற்றும் நிலம் விலை எவ்வளவு' என்ற விபரங்களை கேட்டறிந்துள்ளார். எம்.எல்.ஏ.,வின் ஆர்வத்தை பார்த்தால், விரைவில் அவர், ஊட்டியில் டீ எஸ்டேட் அல்லது நிலம் வாங்குவது உறுதி என்கிறது அக்கட்சி வட்டாரம்.
முக்கிய அமைச்சர் 'மிஸ்சிங்' ஏன்?

டெல்டா மாவட்டங்களில் கன மழை காரணமாக, பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளில் ஆய்வு செய்து, பயிர்களை காக்கும் நடவடிக்கை எடுக்கவும், பயிர் சேத விபரங்களை அறியவும், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில், ஆறு அமைச்சர்கள் கொண்ட குழுவை, முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.
இக்குழுவில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இடம்பெறவில்லை. பயிர் சேதம் கணக்கெடுப்பில், வேளாண் துறை அமைச்சர் இடம்பெறாதது, அனைத்து தரப்பினரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தான் உடல்நிலை சரியாகி வீடு திரும்பியுள்ளார். இதன் காரணமாக, அவரை முதல்வர் குழுவில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தான் உண்மை என நம்புவோம்!